பாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், எம்.எ.சி.சி. எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும்.
ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக மாற்றினார். ஆனால் நடந்தது என்ன?
நாட்டில் மலிந்துகிடக்கும் ஊழலுக்கெல்லாம் ஒரு முடிவு வரப்போகிறது என்று எதிர்ப்பார்த்திருந்த மக்களுக்கோ பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் தொடர் தலையீட்டினால் ஒரு ‘பல் இல்லா புலி’ யாக இயங்கி வந்த அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் நஜிப் காலத்தில் மேலும் மோசமானதை மக்கள் நன்கு அறிவார்கள். போலீஸ் படைத் தலைவர் மற்றும் நீதித்துறைத் தலைவர் மட்டுமின்றி இந்த ஆணையத்தையும் தனது தலையாட்டி பொம்மையாக நஜிப் வசப்படுத்திக்கொண்ட போது நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதை யாரும் மறுக்க முடியாது.
துன் மகாதீரின் மறுசீரமைப்பைத் தொடர்ந்து மீண்டெழுந்த சிங்கமாக நடவடிக்கையில் இறங்கிய அந்த ஆணையம், நஜிப் மற்றும் அவருடைய மனைவி ரோஸ்மாவோடு முன்னாள் துணப்பிரதமர் அஹ்மட் ஸாஹிட், முன்னாள் ஃபெல்டா தலைவர் இசா அப்துல் சமாட், முன்னாள் தாபோங் ஹஜி தலைவர் அப்துல் அஜிஸ் முதலியோரையும் வலைத்துப்பிடித்து நீதிமன்றத்தில் ஏற்றியது.
அதோடு கடந்த ஆண்டு மே 9ஆம் தேதி மாரியம்மன் கோயில் தலைவர் நடராஜா மற்றும் அவருடைய மகனும் கூட இந்த ஆணையத்தின் வலையில் சிக்கியது.
இதனையெல்லாம் கண்கூடாகக் காண பல ஆண்டுகளாக காத்துக்கிடந்த நாட்டு மக்களுக்கோ அளப்பரியா ஆனந்தம்தான்.
அதே போல 19 மில்லியன் ரிங்கிட் ஊழல் தொடர்பாக அண்மையில் பிடிபட்ட தொழிலதிபர் ஞானராஜாவும் அவருடைய மணைவியும் ரோஸ்மாவுடன் அனுக்கமான நட்பைக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
‘சட்டம் எல்லாருக்கும் சமம்’ என பிரதமர் மகாதீர் அடிக்கடி வலியுறுத்தி வருவதற்கு ஏற்ப ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களையும் கூட இந்த ஆணையம் அணுக்கமாக கண்காணித்து வருவது பாராட்டுக்குறியது.
இதற்கிடையே பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லத்திஃபா கோயாவை இந்த ஆணையத்தின் தலைவாராக நியமித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் மகாதீர்.
பதவியில் அமர்ந்து முதல் வேலையாக, குற்றஞ்சாட்டப்படுபவர்கள் இனிமேல் ஆரஞ்சு நிற ஆடைகளில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரபடமாட்டார்கள் என லத்திஃபா அதிரடியாக ஒரு அறிவிப்பை செய்தார்.
நஜிப், ரோஸ்மா மற்றும் அஹ்மட் ஸாஹிட் முதலியோரை ஆரஞ்சு நிற ஆடைகளில் பார்க்க முடியவில்லையே என ஏற்கெனவே காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்களோ இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இருப்பினும், ஊழல் புரிபவர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் இந்த ஆணையத்தின் கழுகுக் குறியில் இருந்து தப்பவே முடியாத என்ற லத்திஃபாவின் கர்ஜனை மக்களின் காதுகளுக்கு இதமான சுகத்தையே அளித்துள்ளது. இது வேண்டாதவரை வேட்டையடும் பணியாக இல்லாமல், நேர்மையான செயலாக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.
எது எப்படியாயினும் புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல்வாதிகளின் அனாவசிய தலையீடு இன்றி சுதந்திரமாக தற்போது செயல்பட்டு வரும் இந்த ஆணையதின் குறியில் அடுத்து யார் என்று மக்கள் ஆவளாக தினமும் காத்திருக்கின்றனர்.
உலகலாவிய ஊழல் சார்ந்த கணக்கெடுப்பில் பங்கு பெற்ற 180 நாடுகளில் நமது நாட்டின் நிலை 61-ஆகும். அதில் நமக்கு கிடைத்த மதிப்பெண்கள் நூற்றில் 47 புள்ளிகள் ஆகும். அதைஅதாவது 0 – என்றால் ஊழல் மலிந்த்துள்ளது 100 என்றால் என்றால் ஊழலே இல்லை என்பதாகும். நமது 47 புள்ளிக நாம் ஊழல் அதிகம் உள்ள நிலையில் உள்ளதை காட்டுகிறது.
‘மலேசியா பாரு’வின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் மறுமலர்ச்சிக்கும் இந்த ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு நல்ல அடிக்கல். கடந்த 60 ஆண்டுகளின் ஊழ்வினையை அகற்ற அரசுடன் மக்களும் இணைய வேண்டும்.