ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நோக்கம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை

“ப.சிதம்பரம் கைது என்பது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்திருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: டெல்லியில் திமுக முன்னின்று நடத்திய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. காஷ்மீரில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றவர்களை எல்லாம் விடுதலை செய்திட வேண்டும் என்பதே அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். அதேபோல், காஷ்மீரில் தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழக்கூடிய வகையில் ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும் எனவும் அந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூலம்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் அழைப்பை ஏற்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, மதிமுக, சரத் யாதவின் லோக்தாந்த்ரிக் ஜனதா தளம் போன்ற கட்சிகளும் அந்தந்த கட்சிகளினுடைய தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். எனவே, அது ஒரு மிகப்பெரிய வெற்றிகரமான ஆர்ப்பாட்டமாக நடந்துள்ளது. திமுகவின் அழைப்பை ஏற்று அதில் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும் வருமாறு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து கைது செய்திருக்கிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? சுவர் ஏறிக்குதித்த அந்தக் காட்சியை நானும் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். சிபிஐ அதிகாரிகள் இப்படி சுவர் ஏறிக் குதித்திருப்பது என்பது, இந்த இந்திய நாட்டிற்கு ஒரு அவமானமாக நான் கருதுகிறேன். அது கண்டிக்கத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத ஒரு சூழல் இருக்கிறது. தமிழகம் முழுவதும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது. திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தமுடியவில்லை என்று ஆளும் கட்சியின் தரப்பில் ஒரு குற்றம் வைக்கிறார்கள். இதைப் பற்றி தங்களின் கருத்து? ப: உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக வழக்கு தொடரவில்லை. முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிற்குக்கூட நீதிமன்றம் தேதி எல்லாம் குறித்து, அந்த தேதியில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று உள்ளாட்சித் தேர்தல் ஆணையமே ஒப்புதல் தந்து, அந்த அடிப்படையில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுநாள் வரையில் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் திமுக அல்ல; திமுக தொடரப்பட்ட வழக்கு அல்ல. திமுக தொடர்ந்த வழக்கு என்பது பழங்குடியினருக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் முறையாக இல்லை; அதனை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் வழக்கு போட்டோமே தவிர, உள்ளாட்சித் தேர்தலை தடை செய்ய வேண்டும் என்பதற்காக போடப்பட்ட வழக்கு அல்ல.

ப.சிதம்பரம்  விவகாரத்தை சி.பி.ஐ கையாளும் விதம் குறித்து உங்களின் கருத்து? அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் இது நடந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 20 முறை சிபிஐ அதிகாரிகள் அவரை அழைத்த நேரங்களில் எல்லாம் முறையாக சென்று, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல், அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.  வெள்ளிக்கிழமை (இன்று) மனுவை எடுத்துக்கொள்வதாக முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில், இந்த கைது என்பது, உள்ளபடியே அரசியல் பழிவாங்கல் நோக்கத்தோடுதான் நடந்திருக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்
மு.க.ஸ்டாலினிடம், ‘‘ப.சிதம்பரத்தின் கைது மூலம் தமிழகத்துக்கும், காங்கிரசுக்கும்  திமுகவுக்கும் தலைக்குனிவு என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி தங்களின் கருத்து என்ன’’ என்று நிருபர்கள் கேட்டனர் அதற்கு அவர்,  ‘‘அவர் ஒரு ஜோக்கர். அவர் சொல்லியிருப்பதற்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here