மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழியர்கள் சொத்து விவரங்களை அறிவிக்க உத்தரவு!

கோலாலம்பூர்:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல் ஹலீம் அமான், தன் துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, ஆணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அதிகாரபூர்வ அறிவிப்பு கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தங்களது சொத்து விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கெடு விதித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ கடிதங்கள் விரைவில் ஊழியர்களுக்கு அனுப்பப்படவுள்ளன.

பொதுமக்களுக்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காக, தனது தலைமையின் கீழ் எடுக்கப்படும் முதற்கட்ட அதிரடி நடவடிக்கை இதுவொரு அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற ஆணையத்தின் மாதாந்தரக் கூட்டத்தில் பேசிய தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான்: “இந்த சொத்து விபர அறிவிப்பில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நானே முதல் ஆளாக எனது சொத்துக்களைப் பிரகடனம் செய்வேன். பொதுமக்களின் உணர்வுகள், ஊடகங்களின் விமர்சனங்கள் அல்லது அரசியல் செல்வாக்கு என எந்தத் தரப்பிலிருந்து வரும் அழுத்தங்களுக்கும் ஊழல் தடுப்பு ஆணையம் ஒருபோதும் பணியாது.”

மேலும், “எந்தவொரு சமரசமும் இன்றி நீதியையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்துவதே எங்கள் கொள்கை. நேர்மை என்பது வெறும் வெற்றுச் சொற்களாகவோ, வாக்குறுதிகளாகவோ மட்டும் இருந்துவிடக் கூடாது. அது அச்சமற்ற விசாரணைகள் மற்றும் ரகசியமான, உறுதியான முடிவுகள் மூலம் செயலில் காட்டப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

தவறான செயல்கள் எதிலும் ஈடுபட்டு அமைப்பின் நற்பெயருக்கு ஊழியர்கள் யாரும் களங்கம் விளைவித்துவிடக் கூடாது என்றும் அவர் இந்த கூட்டத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here