ஐசிசி டெஸ்ட் தரவரிசை டாப் 10ல் நுழைந்தார் பூம்ரா பென் ஸ்டோக்ஸ் முன்னேற்றம்

துபாய்

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா முதல் முறையாக டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து (109), தென் ஆப்ரிக்கா (108),  இங்கிலாந்து (105), ஆஸ்திரேலியா (98) அடுத்த இடங்களில் உள்ளன. பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (910) நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் (904), நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் (878), இந்தியாவின் செதேஷ்வர் புஜாரா (856),  நியூசி. வீரர் நிகோல்ஸ் (749) அடுத்த இடங்களில் உள்ளனர். ஸ்மித்துக்கும், கோஹ்லிக்கும் இடையே மிகக் குறைந்த புள்ளி வித்தியாசமே உள்ளதால், கோஹ்லி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அசத்தி வரும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட், இலங்கை கேப்டன் திமத் கருணரத்னே, நியூசிலாந்தின் டாம் லாதம், இந்திய வீரர் அஜிங்க்யா ரகானே ஆகியோரும்  பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஸ்டோக்ஸ், பேட்டிங் தரவரிசையில் 13வது இடத்தையும், ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல்  டெஸ்டில் 81, 102 ரன் விளாசிய ரகானே 10 இடம் முன்னேறி 11வது இடத்தை பிடித்துள்ளார்.பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (908) முதல் இடத்தில் நீடிக்கிறார். ஆன்டிகுவா டெஸ்டில் 7 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்திய இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா முதல் முறையாக டாப் 10ல்  நுழைந்துள்ளார். அவர் 9 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜடேஜா 10வது இடத்துக்கும், ஆர்.அஷ்வின் 13வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் (433), ஸ்டோக்ஸ் (411, இங்கி.), ஷாகிப் அல் ஹசன் (399, வ.தே.), பிலேண்டர் (326, தெ.ஆப்.) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here