கிள்ளான் – பத்து வருடங்களாகப் போராடிக் காத்து வந்த – கிள்ளான் இந்தியர்களின் அடையாளமாகத் திகழ்ந்து வந்த கிள்ளான் பெர்க்கிலி கார்னர் உணவகம் நேற்று முன்தினம் இரவு தரை மட்டமானது.பல போராட்டங்களைச் சந்தித்து வந்த இந்த உணவகம், பலமுறை நீதிமன்றம் ஏறியும் அதன் மறு செவிமடுப்பு வரும் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் நில அலுவலக அதிகாரிகள் கலகத்தடுப்பு போலீசாரின் உதவியுடன் இயந்திரங்களால் இரவு பத்து மணியளவில் இடித்து தரை மட்டமாக்கினர் என்று அவ்வழக்கை ஏற்று நடத்திய வழக்கறிஞர் கோபிநாத் கருப்பன் மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.
பத்து வருடங்களாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டம் வலுக்கட்டாயமாக இன்றோடு ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.
வழக்கு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தற்காலிகத் தடை உத்தரவை வாங்கி இருந்த நிலையில் இம்மாதம் 27ஆம் தேதி மீண்டும் அது தொடர்பாக வழக்கைச் செவிமடுக்கும் நிலையில் இருக்கும்போது அதிகாரத்துடன் வந்த நில அலுவலக அதிகாரிகள் 2 நிமிட அவகாசம் அளித்து கடையில் உள்ள பொருட்களை எடுக்கச் சொல்லிவிட்டு வாடிக்கையாளர்களையும் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர் என்று உணவகத்தின் உரிமையாளர் முத்துசாமி திருமேனி தெரிவித்தார்.
சாலைகள் அனைத்திலும் போலீசார் குவிக்கப்பட்டதுடன் கலகத்தடுப்பு போலீசாரும் மிக அதிகமாக அங்கே இறக்கப்பட்டிருந்தனர்.
அடுத்து இத்தனை ஆண்டுகளாக அந்த உணவகம் உடைபடாமல் காத்து வந்த பொதுமக்களின் வருகையையும் போலீசார் தடுத்து நிறுத்தியதாகப் பொதுமக்களுள் ஒருவர் கூறினார்.
மாலை 5 மணி அளவில் கொஞ்சம் கொஞ்சமாக அங்குக்களமிறங்கிய போலீசார், பின்னிரவு 1 மணியளவில் உணவகத்தை முழுமையாக இடித்து தரைமட்ட மாக்கியதுடன் பேச்சுவார்த்தைக்குக்கூட இடம் தரவில்லை.பண்டார்பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினரோ நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது மற்ற இந்தியத் தலைவர்களோ அவ்விடத்தில் காண முடியவில்லை என்பதுடன் ம.இ.கா.வினர் சிலரை மட்டும் அங்குக்காண முடிந்தது.
செனட்டர் டத்தோ டி.மோகன், ம.இ.கா. உச்சமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் தேசிய இளைஞர் அணி அரசியல் செயலாளர் அரவிந்த் ஆகியோர் மட்டுமே நிலைமையை நேரில் காண வந்திருந்தனர்.
இவ்விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.