கோலாலம்பூர்-புகைமூட்டம் மோசமடைந்ததை அடுத்து சிலாங்கூரிலும் பகாங்கிலும் மொத்தம் 21 பள்ளிகள் மூடப்பட்டன.இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்திராவிலும் கலிமந்தானிலும் காடுகள் பற்றி எரிவதன் காரணமாக மலேசியா முழுவதும் புகைமூட்டம் மோசமடைந்து வருகிறது.
சரவா மாநிலத்தில் நேற்று முன்தினம் 240 பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் காற்றின் தூய்மைக்கேட்டின் அளவு மோசமடைந்ததை அடுத்து சிலாங்கூரிலுள்ள கிள்ளானில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டன.ஜோகான் செத்தியா பகுதியில் காற்றின் தூய்மைக்கேட்டின் அளவு 200ஐத் தாண்டியதை அடுத்து நேற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேவேளையில் பகாங், ரொம்பின் வட்டாரத்தில் காற்றின் தூய்மைக்கேட்டு அளவு 204ஐ எட்டியதை அடுத்து அங்கு 16 பள்ளிகள் மூடப்பட்டன.புகைமூட்டம் மோசமடைந்துள்ள பகுதிகளில் பள்ளிகளை மூடுவதற்கு மாநில கல்வி இலாகா அல்லது பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கலாம் என்று கல்வி அமைச்சரகம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.