கோலாலம்பூர் – பத்து ஆராங், ரவாங்கில் மூன்று நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சுயேச்சை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கேட்டுக்கொண்டார்.
இவ்விவகாரத்தில் பல கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும். ஆகவே சீயேச்சை விசாரணை அவசியமாகிறது என்றார் அவர். கடந்த சனிக்கிழமை அதிகாலை போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைப் பிரஜையான ஜனார்த்தனன் விஜயரத்தினம் (வயது 40), எஸ். மகேந்திரன் (வயது 23), ஜி. தவச்செல்வம் (வயது 31) ஆகியோர் சு சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இவர்கள் கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ நூர் அஸாம் ஜமாலுடின் கூறியுள்ளார்.இவர்களுடன் இருந்ததாகக் கூறப்படும் ஜனார்த்தனின் மனைவி ஜி. மோகனாம்பாள் (வயது 35) காணாமல் போய்விட்டதாக அவர்களின் குடும்பத்தார் முறையிட்டுள்ளனர்.
மோகனாம்பாளை போலீஸ் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த மூவரின் குடும்ப உறுப்பினர்களும் நேற்று வழக்கறிஞர் மனோகரன் மலையாளத்தை சந்தித்து சட்ட உதவியை நாடியுள்ளனர். அப்போது ஹிண்ட்ஃராப் 2.0 தலைவர் பி. உதயகுமாரும் உடன் இருந்தார்.
இவ்விவகாரத்தில் சுயேச்சை விசாரணை நடத்த சிறப்புக் குழுவை தேசிய போலீஸ் படைத்தலைவர் அமைக்க வேண்டும் என மனோகரன் மலையாளம் கேட்டுக் கொண்டார். மோகனாம்பாள் எங்கே? என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்கும் பதில் தெரியாமல் குடும்பத்தார் வேதனையில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
ஜனார்த்தனன் சுட்டுக் கொல்லப்பட்டநிலையில் மோகனாம்பாள் எங்கே உள்ளார் என்பது தெரியாமல் அவர்களின் மூன்று பிள்ளைகளும் பிரிட்டன் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர். மோகனாம்பாள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜனார்த்தனின் உடலுக்கு இறுதிக் கடமைச் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். இவ்விவகாரம் தொடர்பில் போலீஸ் படைத்தலைவரைச் சந்திக்க விரும்புவதாக உதயகுமார் கூறினார்.
இதற்கிடையே மூவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும் என்று ஜஸ்பிண்டர் கோர் கேட்டுக்கொண்டார்.
அச்சம்பவத்தின்போது போலீஸ் வாகனத்தில் உள்ள டேஷ் கேம் கேமராவில் என்ன நடந்தது என்பது பதிவாகியிருக்கும். அதனை போலீஸ் வெளியிட வேண்டும் என உதயகுமார் கேட்டுக் கொண்டார்.
தவச்செல்வனின் மனைவி ஜஸ்பிண்டரும் இதே கோரிக்கையை முன்வைத்தார்.
அந்தக் கேமரா மதிவு பல கேள்விகளுக்கு விடை கூறும். அதே சமயம் அக்காரில் மோகனாம்பாள் இருந்தாரா என்பதும் இதன் மூலம் தெரிய வரும் என்று அவர்கள் கூறினர்.என் கணவரை பொக்கா சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கலாம். எதற்காக சுட்டுக் கொல்ல வேண்டும் என ஜஸ்பிண்டர் கேட்டார்.
ஆர்.பார்த்திபன்