டெக்ஸாஸ் –
அமெரிக்காவில், டெக்ஸாஸிலுள்ள `வொய்ட் ஹால்’ நகரின் தீயணைப்புத் துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த ஏலத்தில் `வில்லியம் சார்லஸ் மெக்மில்லன்’ கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேயர் சார்லி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன், ஏழு மாதக் குழந்தை. கடந்த ஞாயிற்றுக்கிழமை வொயிட் ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு தன்னுடைய கௌரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார். 150 பேர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
“வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை உளமாற ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு உண்மையாகவும் இருப்பேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும் கனிவாகவும் அன்புடனும் இருப்பேன். தீயணைப்புத் துறை வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்துச் செல்வேன். எனது நாட்டைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பேன். அதற்காக அம்மாவும் அப்பாவும் உதவி செய்ய வேண்டும்” என்று மேயர் சார்லி சார்பாக ஃபிராங்க் என்பவர் பேசினார்.
பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட கவுன்சிலர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,“ மேயர் சார்லி, தன்னுடைய குழந்தை மொழியில் மகிழ்ச்சியாகக் கூட்டத்தை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தார். விழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அவரை மிகவும் நேசித்தனர். எங்கள் நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் கடுமையான நேரம் இதுதான். நாட்டில் மீண்டும் அமைதியையும் அன்பையும் கொண்டுவர மேயர் சார்லி முழுமையாக உழைக்க வேண்டும்” என்று பேசினார்.
மேயர் சார்லியின் வளர்ப்புத்தாய் நேன்ஸி, “எந்தவித பாகுபாடுமின்றி மேயர் சார்லி அனைவரையும் நேசிப்பார். அனைவரின் ஒற்றுமைக்காகவும் உழைப்பார். `மேக் அமெரிக்கா கைன்ட் அகெய்ன்’ என்பதே அவரின் அரசியல் முழக்கம்” என்று கூறினார். அமெரிக்காவின் வரலாற்றில், மிகச்சிறிய வயதில் மேயரான குழந்தை என்ற சிறப்பையும் சார்லி பெற்றுள்ளார். நெட்டிசன்கள், `நான் மேயர் சார்லியை விரும்புகிறேன்’ போன்ற கேப்ஷன்களுடன் அவரின் கியூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.