கேமரன் மலை இந்திய விவசாயிகளுக்கு மாற்று இடம் தருவீர்

கோலாலம்பூர் –

கேமரன்மலை, கோலத்தெர்லாவில் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் கிட்டத்தட்ட 60 குடும்பங்களுக்கு மாற்று நிலம் தரவேண்டுமென்று மஇகா சிலாங்கூர் மாநிலத் தலைமைத்துவமும் மஇகா தேசிய சட்ட உதவிப் பிரிவுத் தலைவர் ஆர்.டி. ராஜசேகரனும் நேற்று கேட்டுக்கொண்டனர்.

பகாங்கில் குறிப்பாக கோலத்தெர்லா பகுதியில் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பில் 250 ஏக்கர் நிலத்தைக் கொடுப்பதால் மாநில அரசாங்கம் நொடித்துப்போய் விடாது என்று இவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த 40 ஆண்டுகளாகத் தங்களின் வியர்வையைச் சிந்தி கடுமையாக உழைத்து மண்ணைப் பதப்படுத்தி விவசாயம் செய்துவந்த இவர்களைக் கண்களைக் கட்டி காட்டில் விட்டதுபோல் அங்கிருந்து விரட்ட நினைப்பது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல் என்று சிலாங்கூர் மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் எம்.பி. ராஜா மற்றும் அவர்தம் மாநில நிர்வாகக் குழுவினர் வர்ணித்தனர்.

இவர்களுக்கு மாற்று நிலம் எதுவும் தராமல் இந்த 60 குடும்பங்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருப்பது ஏன் என்று பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கம் தெளிவான விளக்கம் தரவேண்டும் என்று ராஜசேகரனும் எம்.பி. ராஜாவும் கேட்டுக்கொண்டனர்.

இந்த விவசாயிகள் இங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு சுங்கை கோலத்தெர்லாவில் ஏற்பட்டுள்ள தூய்மைக்கேடுதான் காரணம் என்பது ஒப்புக்குச் சப்பாணி கதையாக இருக்கிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி பின் டத்தோ முகமட் நோர் இந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த இந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு பகாங் மாநில மந்திரி பெசாரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், இதனை அவர் செய்யத் தவறியிருக்கிறார். மேலும் இத்தொகுதியில் அவர் இருக்கிறாரா? இல்லையா என்பதும் தற்போது கேள்விக்குறியாகி வருகிறது.
மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தாம் தயார் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி பின் வான் இஸ்மாயில் பலமுறை கூறியிருக்கிறார்.

இதன் அடிப்படையில் ரம்லி, மந்திரி பெசாரை நேரில் சந்தித்து இந்த விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த 60 விவசாயிகளையும் அங்கிருந்து வெளியேற்றுவது என்று மாநில அர

செயற்குழு முடிவெடுப்பதற்கு முன்னர் தாம் சம்பந்தப்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசவில்லை என்று ரம்லி கூறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது என்று ராஜாவும் ராஜசேகரனும் தெரிவித்தனர். தங்களுடைய மனக்குறைகளைக் கேட்டறிவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வருவார் என்று காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்ததுதான் மிச்சம் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் குமுறினர்.

கேமரன்மலை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ரம்லி அதன் வாக்காளர்களை குறிப்பாக இந்தியர்களை அலட்சியப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல் என்று இவர்கள் வர்ணித்தனர்.

மூன்று முதல் நான்கு தலைமுறையாக இந்த விவசாயக் குடும்பங்கள் மிகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் உழைத்து மாநில அரசாங்கத்தின் பொருளாதார மேன்மைக்குப் பக்கபலமாக இருந்திருக்கின்றனர் என்பதை ரம்லி மறந்துவிடக்கூடாது.
மந்திரி பெசாரை நேரில் சந்தித்து ரம்லி பேசுவாரேயானால் இந்தப் பிரச்சினைக்கு வெகு எளிதில் தீர்வு கண்டுவிடலாம் என்று ராஜாவும் ராஜசேகரனும் நம்பிக்கை தெரிவித்தனர்.

தேசிய முன்னணி வரலாற்றில் நெருக்கடிமிக்க ஒரு காலகட்டத்தில் மஇகா இந்த கேரமன்மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து ரம்லியின் வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபட்டது என்பதை தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மறந்துவிடக்கூடாது. அன்று மஇகா செய்த ஒரு தியாகத்தின் அடிப்படையில் அதன் பாரம்பரியத் தொகுதியான கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியை அன்று விட்டுக்கொடுத்தது. இன்று அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு மக்களவையில் அமர்ந்திருக்கிறார்.

இல்லையென்றால் பணி ஓய்வுபெற்ற ஒரு போலீஸ் அதிகாரியாகத்தான் அவர் இன்றளவும் பார்க்கப்பட்டிருப்பார். மஇகாவின் தியாகத்தை ரம்லி எளிதில் மறந்துவிடக்கூடாது. வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் நிலைமை மாறக்கூடிய சாத்தியம் பிரகாசமாக இருக்கின்றது. இந்த விவசாயிகள் விவகாரத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் எடுக்கும் முடிவுகளுக்குத் நாங்கள் பக்கபலமாக இருப்போம் என்று எம்.பி. ராஜாவும் ஆர்.டி. ராஜசேகரனும் சூளுரைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here