ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவப் பெண் கேப்டன்கள்

கொல்கத்தா –

ஒடும் ரயிலில் கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதில் இந்திய ராணுவத்தின் இரு பெண் கேப்டன்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஹவுரா சந்திப்பு – குஜராத்தின் ஆமதாபாத் சந்திப்புக்கு இடையே பயணிக்கும் ஹவுரா அதிவிரைவு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தகவலறிந்தவுடன் அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இந்திய ராணுவத்தின் 172 ராணுவ மருத்துவ மனையைச் சேர்ந்த பெண் மருத்துவர்களான கேப்டன் லலிதா மற்றும் கேப்டன் அமன்தீப் ஆகியோர் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதிப்படுத்தினர். இச்செயலைப் பாராட்டும் விதமாக இந்திய ராணுவம், பிறந்த குழந்தை மற்றும் இரு பெண் மருத்துவர்களின் புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்தது.
எந்த நேரத்திலும் இந்திய ராணுவம் துணை நிற்கும் என்பதை மெய்ப்பிக்கும் விதமான இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரது மத்தியில் பாராட்டினைப் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here