பாக்தாத் –
ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர். அத்தூதரகத்தை நோக்கி கல்வீச்சு நடத்திய அந்நபர்கள், அங்குள்ள பாதுகாப்புச் சாவடியொன்றையும் தீயிட்டு எரித்தனர். அச்சம்பவத்தின்போது தூதரகப் பாதுகாவலர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதலும் நடைபெற்றது.
அமெரிக்கத் தூதரக வளாகம் மீது மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலுக்கு ஈரானே முழுப்பொறுப்பு என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்தார். மூன்று நாட்களுக்கு முன்பு ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள காதாயிப் ஹெஸ்புல்லா எனும் குடிப்படையினரின் இலக்குகள் மீது அமெரிக்கப் போர்விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. ஈராக்கில் அமெரிக்க குத்தகையாளர் ஒருவர் குடிப்படையினரின் தாக்குதலுக்குப் பலியானதைத் தொடர்ந்து அமெரிக்கா அத்தாக்குதலை நடத்தியது. அதில் இருபத்தைந்து குடிப்படை வீரர்கள் பலியானதோடு மேலும் ஐம்பது பேர் காயமுற்றனர்.
காதாயிப் ஹெஸ்புல்லா குடிப்படை ஈரானுக்கு ஆதரவானதாகும். அந்த குடிப்படையை உள்ளடக்கிய ஹாஷ்ட் சாஆபி எனும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்தான் அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆவர்.
அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ஈரானுக்குப் பதிலடி கொடுக்கப்போவதாகவும் அதிபர் டிரம்ப் நேற்று எச்சரித்தார்.
அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டாலோ அதற்கு ஈரான்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டிவரும். அதற்கு அவர்கள் பெரிய வெகுமதியைக் கொடுக்க வேண்டிவரும். இது எச்சரிக்கை அல்ல, ஒரு மிரட்டல் என்று தமது டுவிட்டர் செய்தியில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய குடிப்படையினரின் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய வேளையில், அமெரிக்கத் தூதரகத்தில் இருந்த எந்தவோர் ஊழியருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கும் திட்டமிடவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
தூதரகத்தின் நுழைவாயிலில் உள்ள பாதுகாப்புச் சாவடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு எரித்தபோது அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக தூதரகக் காவலர்கள் அதிர்வெடிகள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பாய்ச்சினர். இருந்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்களால் அதன் வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை.
அத்தாக்குதலைத் தொடர்ந்து பரந்து விரிந்து கிடக்கும் அப்பெரிய தூதரக வளாகத்தைப் பாதுகாக்க அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஈராக்கில் அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட இந்த எதிர்பாராத தாக்குதலினால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மேலும், ஈராக்குடான அமெரிக்காவின் உறவும் மோசமாகச் சீர்குலைந்துள்ளது.
இதனிடையே, மத்திய கிழக்கிற்கு மேலும் எழுநூற்று ஐம்பது படைவீரர்களை அனுப்ப அமெரிக்க முடிவு செய்துள்ளது. ஈராக்கில் தற்போது நாலாயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.
ஈராக்கில் அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இதுவாகும். ஆயினும், ஏழாண்டுகளுக்கு முன்பு லிபியாவில் அமெரிக்கத் தூதரகம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற அத்தாக்குதலில் அமெரிக்கத் தூதரும் மேலும் மூன்று தூதரக அதிகாரிகளும் உயிரிழந்தனர்.