ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னை –

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதனை அறிந்துகொள்ள கிராம மக்கள் இடையே இப்போதே ஆவல் அதிகரித்துள்ளது.
தங்கள் ஊருக்கு பஞ்சாயத்து தலைவர் யார், வார்டு மெம்பர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்கள் மிகவும் ஆவலுடன் வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடந்துள்ளதால் அந்த வாக்குச்சீட்டுகளை வண்ணம் வாரியாக பிரித்து கைகளில் எண்ண வேண்டும் என்பதால் காலை 11 மணிக்குப் பிறகே முன்னணி நிலவரம் பற்றிகூட அறிந்துகொள்ள முடியும்.
கடந்த 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ள நிலையில் முழுமையான முடிவுகளை அறிவிக்க நள்ளிரவு வரை கூட ஆகக்கூடும். வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறைச் சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதில் காவல்துறை மிக உறுதியாக உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவர்களுக்கு தேர்தல் அதிகாரிகளால் வழங்கப்பட்ட முகவர் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதேபோல் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் செல்போன்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களைப்போல் இல்லாமல் வாக்குச்சீட்டுகளில் பதிவான வாக்குகளை கைகளால் வண்ணம் பிரித்து ஆசிரியர்கள் எண்ண வேண்டும் என்பதால் முன்னணி நிலவரம் பற்றி அறியவோ, முடிவுகளைத் தெரிந்துகொள்ளவோ காலை 11 மணிக்கு மேல் ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here