மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை!

அதிரடி வீரர் ரோகித் சர்மா பதிலடி

புதுடில்லி –

எனக்கு எதிரான விமர்சனம் குறித்து கவலைப்படுவது கிடையாது. மேலும் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றியும் எனக்கு கவலையில்லை என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக அறிவித்துள்ளார்.

நான் சிந்திப்பதில் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டவன். எனது வாழ்க்கையில் குடும்பத்துக்கு அதிக இடம் அளிப்பவன். மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. எனது மனைவியும் குழந்தையும் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். எனவே அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்கிறேன்.

இது குறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நான் சிந்திப்பது கிடையாது. என்னைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் நல்ல மற்றும் மோசமான கருத்துக்கு எதிராகப் பேசும் வயதை நான் கடந்து விட்டேன்.

நான் டெஸ்ட் போட்டி குறித்து சிந்திப்பதை நிறுத்தி நீண்டகாலம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் டெஸ்ட் போட்டி முடிந்ததும் எனது ஆட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து வீடியோ காட்சிகளை பார்த்து அதிகம் சிந்திப்பேன்.

ஆட்ட நுணுக்கம் குறித்து அதிகம் சிந்தித்தால் ஆட்டத்தை அனுபவித்து விளையாட முடியாது. எந்தவொரு போட்டியிலும் எதிர்மறையான எண்ணத்துடன் விளையாடக்கூடாது. டெஸ்ட் போட்டியில் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here