ஈரான் எறிபடைத் தாக்குதலில் 80 அமெரிக்கர்கள் பலி!

தெஹ்ரான் –

ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய எறிபடைத் தாக்குதலில் எண்பது அமெரிக்க பயங்கரவாதிகள் பலியாகினர் என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரானிய ராணுவம் தொடர்ச்சியாக ஏவிய எறிபடைகளால் அமெரிக்காவின் பல ஹெலிகாப்டர்களும் பல்வேறு போர்ச் சாதனங்களும் அழிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

மேற்கு ஈராக்கின் அய்ன் அல்-ஆசாத் விமானப் படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அத்தளம் முற்றாக அழிந்தது என்று ஈரானின் புரட்சிக் காவல் படை தெரிவித்தது. அத்தாக்குதல் எல்லா வகையிலும் வெற்றியாக அமைந்தது என்றும் அது கூறியது.

இதனிடையே, இத்தாக்குதல் அமெரிக்காவின் முகத்தில் கொடுக்கப்பட்ட ஓர் அறையாகும் என்று அந்நாட்டின் பெருந்தலைவர் அயாதுல்லா அலி காமேனி வருணித்துள்ளார். அந்த அறை போதாது. இந்த வட்டாரத்திலிருந்து அந்நாடு வெளியேறும் வரையில் இதுபோன்ற பலத்த அறைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் இரண்டு ராணுவத் தளங்களை குறிவைத்து அந்த எறிபடைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலில் உயிருடற்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதா என்பது பற்றி அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

ஈரானிய அதிரடி படைத் தலைவர் காசிம் சுலைமானியை அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தினரை பயங்கரவாதிகள் என்று ஈரானிய அரசாங்கம் வருணித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here