செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு

கோலாலம்பூர் –

செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள விவகாரத்திற்கு மலேசியாவும் இந்தியாவும் அனைத்து சாத்தியமான அரச தந்திர வழிகளில் தீர்வு காண முனைப்புக் காட்ட வேண்டும் என்று எம்டியூசி எனப்படும் மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதிக்குமானால் அது மலேசிய செம்பனைத் தொழில்துறை ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் மிகவும் கடுமையாகப் பாதிக்கும் என்று அது தெரிவித்தது.

அண்மையில் காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் குறித்தும் மலேசியா கருத்து தெரிவித்ததால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று இந்தியா அறிவித்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் ராய்ட்டரிடம் தெரிவித்தன.

இந்த முடிவின் மூலம் இந்தியா இனி கச்சா எண்ணெயை மட்டுமே இறக்குமதி செய்யும். இந்தியாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெயை விநியோகம் செய்யும் முக்கிய நாடாக விளங்கும் மலேசியாவுக்கு இந்த முடிவு பெரும் பாதிப்பைக் கொண்டு வரும்.

ஆகவே இரு நாடுகளும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளையும் அல்லது அரச தந்திர அகங்காரப் போக்கையும் ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்று எம்டியூசி தலைமைச் செயலாளர் ஜெ. சாலமன் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகப் போருக்கும் பொருளாதாரத் தடைக்கும் வழிவகுத்து விடக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகின்றோம் என்றார் அவர்.

இந்த முடிவு அமல்படுத்தப்பட்டால் மலேசியாவின் செம்பனைத் தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கும் அந்தத் துறையுடன் சம்பந்தப்பட்ட இதர துறைகளுக்கும் நேரடியாகப் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

செம்பனைத் தோட்டத் தொழிலாளர்களுடன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். அதோடு போக்குவரத்துத் தொழில்துறை, வாகன ஓட்டுநர்கள், குத்தகையாளர்கள், உரங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள், இவர்களைச் சார்ந்த குடும்பத்தினர் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் இது பாதிக்கும்.

இந்தத் தடை லட்சக்கணக்கான மலேசியர்களைப் பாதிக்கச் செய்து விடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவின் செம்பனை எண்ணெய்க்கு விதிக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் மலேசியாவின் செம்பனைத் தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இந்திய நாட்டுத் தொழிலாளர்களையும் பாதித்துவிடும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here