பள்ளிகளில் பாட – பயிற்சி நூல்கள் பற்றாக்குறை!

பாரிட் புந்தார் –

இவ்வாண்டிற்கான கல்வி ஆண்டு தொடங்கி மூன்றாவது வாரத்திற்கு மாணவர்கள் செல்ல இருக்கும் நிலையில் நாடு முழுவதிலுமுள்ள பல பள்ளிகளில் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் பாட நூல்களுக்கும் பயிற்சி நூல்களுக்கும் பற்றாக்குறை நிலவுவதுடன் சில பாடங்களுக்கு முற்றிலும் நூல்கள் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மலாய் மொழி உட்பட சில பாடங்களுக்கான புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படிநிலை ஒன்றில் அதாவது ஒன்றாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை இந்நிலை கடுமையாக இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான அனைத்துப் பாடங்களுக்கான பாட நூல்கள் இருந்தாலும் அப்பாடங்களுக்கான பயிற்சி நூல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தவிர்த்து இவ்வாண்டு முற்றிலும் புதிய பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள படிநிலை இரண்டின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான பாடப் பயிற்சி நூல்கள் கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதிலும் தேசிய மொழி, அறிவியல் பாட நூல்கள் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழ்நிலைகள் குறிப்பாக பாடநூல்கள் பற்றாக்குறை என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் இந்நிலைகள் உருவாகும்போது மாவட்டக் கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் சுற்று வட்டாரங்களில் கூடுதலாகவுள்ள பள்ளிகளில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைகள் பள்ளியில் செயல்படும் இலவச பாடநூல் திட்டப் பொறுப்பாசிரியர்கள் வழி தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.

என்றாலும் நான்காம் ஆண்டு போன்ற வகுப்புகளில் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தும்போது அமைச்சிடமிருந்து புதிய புத்தகங்களுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதற்கிடையே தமிழ், சீனப்பள்ளிகளில் ஜாவி எழுத்துப் பயன்பாடு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையே இச்சிக்கலுக்கான காரணமா என்று சில தலைமையாசிரியர்களைக் கேட்டபோது அதுபற்றி கருத்துரைக்க மறுத்த அவர்கள் அறிவியல் வரலாற்றுப் பாட நூல்கள் கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

கல்வி ஆண்டு தொடங்கும் முதல் நாளிலேயே வகுப்புகள் முறையாகச் செயல்பட வேண்டும் என்றும் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கும் கல்வி அமைச்சு இத்தகைய குறைபாடுகள் நீடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பல பள்ளிகளின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர்களும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர்களும் கருத்துரைத்துள்ளனர்.

பற்றாக்குறை நிலவும் பள்ளிகள் மற்ற பள்ளிகளில் பாட நூல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற திட்டத்தை கல்வி இலாகா பரிந்துரைத்தாலும் பல பள்ளிகளிலுள்ள நூல்களில் பல கிழிந்தும் பயன்பாட்டிற்குப் பெரும்பகுதி ஏற்றதாக இல்லாத நிலையிலும் இருப்பதால் ஆசிரியர்கள் பெற்றோரின் குறைகூறல்களுக்கு ஆளாவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே மாணவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படுவதால் கூடுதலான புத்தகங்களுக்கு பள்ளிகள் விண்ணப்பிக்க முடியாத சிக்கலும் இதனுடன் தொடர்புடையதாக இருப்பதாக அவர்கள் கூறினர். எனவே இத்தகைய குறைபாடுகள் நீடிப்பதைக் கல்வி அமைச்சுக் களைய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிது.

இதற்கிடையே நூல்கள் பற்றாக்குறை, நூல்கள் கிடைக்காமல் இருக்கும் சிக்கல்கள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டு வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் அவை முற்றிலும் தீர்க்கப்படும் என்று கல்வி இலாகா அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here