ஆஸி.யிடம் 10 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி!

மும்பை –

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டில் படுதோல்வி கண்டிருக்கிறது. இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

மும்பை வான்கடே அரங்கில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அணித்தலைவர் ஆரோன் ஃபன்ச் 110 ரன்களையும் டேவிட் வார்னர் 128 ரன்களையும் விளாசி இறுதி வரை களத்தில் நிற்க 74 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி.

முதலில் களம் இறங்கிய இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஷிகர் தவானும் (74) லோகேஷ் ராகுலும் (47) இணைந்து 121 ரன்களைச் சேர்த்தனர்.

பின்வந்தவர்கள் அந்த நல்ல அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால் இந்திய அணி 49.1 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களை மட்டும் எடுத்தது.

முகம்மது ஷமி, ஜஸ்பரீத் பும்ரா என உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி கொண்டிருந்ததால் ஆஸ்திரேலியா ரன்களைக் குவிக்கத் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தது.

ஆஸி. அணி வீரர்கள் அதிரடி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒட்டுமொத்த இந்திய அணியே தடுமாறியது. எல்லா கோணங்களிலும் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி எங்களை வீழ்த்திவிட்டது என்று கேப்டன் வீராட் கோஹ்லி குறிப்பிட்டார். இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here