ஈப்போ –
கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் தாய்லாந்து, பெங்காலான் உலு எல்லையின் சுங்கச்சாவடியில் மூன்று பெண்களிடமிருந்து பேராக் மாநில சுங்கத்துறை அதிகாரிகள் 5 லட்சம் வெள்ளியைப் பறிமுதல் செய்ததாக மாநில சுங்கத்துறை இயக்குநர் டாக்டர் முகமட் ஷர்பான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இவ்விவகாரத்தில் இரு தாய்லாந்துப் பெண்களும் ஒரு மலேசியப் பெண்மணியும் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களின் வயது 40 முதல் 51 வரை என்று அவர் குறிப்பிட்டார். இவர்கள் துணி வியாபாரிகள் என்று தங்களை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறினார். தற்போது இவர்களிடம் தொடர் விசாரணை செய்யும் பொருட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாளை இவர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.
ஒருவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் மலேசியாவிற்குக் கொண்டு வந்தால் அவர் முறையாக சுங்கச்சாவடியில் பாரங்களைப் பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த மூன்று பெண்மணிகளும் அப்படி எதுவும் செய்யாமல் தங்கள் காரில் இருந்த பைகளில் இந்த 5 லட்சம் வெள்ளியை வைத்திருந்தனர் என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரம் குறித்து தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக அவர் கூறினார். இந்தப் பணம் யாருடையது? எந்தக் கும்பலுக்குச் சொந்தமான பணம்? பணம் மலேசியாவில் எங்கு பட்டுவாடா செய்யப்படவுள்ளது? இவர்களின் தொழில் என்ன என்பனப் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்க விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியப் பெண்மணி சுங்கைபட்டாணியைச் சேர்ந்தவர் ஆவார்.
இவ்விவகாரத்தில் தாய்லாந்து காவல்துறை மற்றும் சுங்கத்துறை இலாகாவின் அதிகாரிகளுக்கு டாக்டர் முகமட் ஷர்பான் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன், பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். குறிப்பாக, சிகரெட், சுடும் ஆயுதம், மதுபானம், பட்டாசு கடத்தலில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.