புதிய கூட்டணியை அமைக்கும் சதி

துன் மகாதீருக்கு தொடர்பு இல்லை

 

பெட்டாலிங் ஜெயா –

எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்கும் சதிக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.

நேற்றுக் காலை பிரதமரைச் சந்தித்தபோது அவர் இதனை வலியுறுத்தியதாக அவர் சொன்னார். துன் மகாதீரின் பெயர் என் கட்சிக்குள்ளும் வெளியேயும் பயன்படுத்தப் பட்டுள்ளது. துன் மகாதீர் முன்பு கூறியதை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தச் சதித்திட்டத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அன்வார் குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் இருந்தே துன் மகாதீர் தெளிவாக உள்ளார். முன்னாள் அரசாங்கத்துடன் தொடர்புடையவருடன் அவர் ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டார் என்று அன்வார் குறிப்பிட்டார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கெஅடிலான் தலைமையகத்தில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் அன்வார் பேசினார்.

கெஅடிலான் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், தேசிய முன்னணி, பாஸ், ஜிபிஎஸ், வாரிசான் ஆகிய தரப்பு சம்பந்தப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைப் பின்னணியில் துன் மகாதீர் உள்ளார் என்ற பரவலான யூகங்களுக்கு மத்தியில் அன்வார் இதைத் தெளிவுபடுத்தினார்.

நம்பிக்கைக் கூட்டணியின் எதிர்காலம் பற்றியும் நான் அடுத்த பிரதமர் ஆவேனா என்பது பற்றியும் எனக்கு இப்போதைக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார் அன்வார்.

ஆனால், ஜனநாயக நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். மாமன்னரைச் சந்திப்பது மிக முக்கியம். அந்த நடைமுறையை நாம் மதிக்க வேண்டும் என அன்வார் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here