துருக்கி – ஈரான் எல்லையில் நிலநடுக்கம்

இஸ்தான்புல் –

ஈரானுடன் துருக்கியின் எல்லைப் பகுதியை ஞாயிற்றுக்கிழமையன்று 5.7 ஆற்றல் கொண்ட நிலநடுக்கம் உலுக்கியது. அதில் ஒன்பது பேர் உயிரிழந்ததோடு நூற்று இருபத்தைந்து பேர் காயங்களுக்கு ஆளாகினர்.

துருக்கியில் உயிரிழந்த ஒன்பது பேரில் மூவர் குழந்தைகள் ஆவர். மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அங்கு காயமுற்றுள்ளனர். அவர்களுள் ஒன்பது பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். துருக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் இதர கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளன.

துருக்கியின் வான் நகரின் மேற்காக தொண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், அந்நகரின் கிழக்கே ஈரான் எல்லைக்குள்ளும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ஈரானில் எழுபத்தைந்து பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் அறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டின் அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது.

அந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியை பல பின்னதிர்வுகள் உலுக்கின. அதில் பெரியது 6.0 ஆற்றல் கொண்ட நிலஅதிர்வாகும். முதல் நிலநடுக்கம் நிகழ்ந்த பத்து மணிநேரத்திற்குப் பிறகு அந்நிலஅதிர்வு உலுக்கியது.

முதல் நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.53 மணிக்கும் இரண்டாவது நிலநடுக்கம் மாலை 7.00 மணிக்கும் நிகழ்ந்தது. அவ்விரு நிலநடுக்கங்களும் பூமிக்கு அடியில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தன என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் பூகம்பவியல் மையம் தெரிவித்தது.

துருக்கியில் ஏராளமான கிராமங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின. பாஸ்காலே, சாரே மற்றும் கும்பினார் ஆகிய மாவட்டங்களில் பரவலாகச் சேதம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here