ஜாகர்த்தா –
திடீரென்று பெய்த கனத்த மழையினால் இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அமிழ்ந்துள்ளதோடு அந்நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான ஆஸ்திரேலியாவிலும் இந்திய பெருங்கடலிலும் ஏற்பட்டுள்ள வெப்ப மண்டல புயல்களே திடீர் மழைக்குக் காரணமாகும் என இந்தோனேசியாவின் வானிலைத்துறை தெரிவித்துள்ளது.
ஜாவா, பாலி மற்றும் நூசா தெங்காரா ஆகிய தீவுகளிலும் கனத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. ஜாவா கடல் பகுதியில் பேரலைகள் பொங்கிக் கொண்டிருக்கின்றன என்று வானிலைத்துறை தெரிவித்தது.
மேற்கு ஜாகர்த்தாவில் குறிப்பாக பெகாசி மாவட்டத்தில் வெள்ள நிலை மிக மோசமாக உள்ளது. அந்நகரின் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் ஏறியுள்ளது. இதனால் தரைப் போக்குவரத்து நிலைகுத்தியுள்ளது.