கோலாலம்பூர், மார்ச் 11-
‘கொல்லைப்புற வாசல் வழியான அரசாங்கத்தைக் காட்டிலும் பொதுத்தேர்தலை நடத்தும் வகையில் முன்வாசலைத் திறந்து வையுங்கள்’
மேற்கண்டவாறு சொல்லியிருப்பவர் அம்னோ கட்சியின் பொதுச் செயலாளர் அன்னுவார் மூசா. கொல்லைப்புறம் வழியாக நுழைந்தாகக் கூறப்பட்டு அரசாங்கமும் அமைக்கப்பட்டு அதில் பங்கு வகித்து கூட்டரசுப் பிரதேச அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அன்னுவார் மூசாவின் இந்த புதிய கருத்து அழகான அதிர்ச்சியாகவே கருதப்படுகிறது.
பொதுத்தேர்தலை நடத்துங்கள் என்று நாங்கள் இப்போதுதானா சொல்கிறோம். கடந்த சில வாரங்களாகவே அம்னோ இதைத்தானே வலியுறுத்தி வருகின்றது என்கிறார் அன்னுவார்.
கொல்லைப்புற வாசல் வழியாக வந்து அமைச்சர் பதவியில் அமர்ந்து விட்ட ஒருவர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு வலியுறுத்துகிறார் என்றால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான இந்த அமைச்சரவை தாங்குமா தாங்காதா என்ற கேள்வி எழுகிறது.
புதிய அரசாங்கம் வலுவானதாக இருப்பின் அன்னுவார் மூசா இப்படி கருத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது என பரவலான கருத்து பரவி வருகிறது. எனினும், அன்னுவார் மூசாவின் முன்வாசலைத் திறந்து வையுங்கள் என்ற கருத்தும் பொதுமக்களால் பாராட்டப்படவே செய்கிறது.