ஈப்போ:
ஈப்போ, தாமான் டேசா அமான் பகுதியில் உள்ள இல்லம் ஒன்றில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முஹமட் நஜீப் ஹம்ஸா வெளியிட்ட தகவல்கள் பின்வருமாறு:
நேற்று இரவு 10 மணியளவில் இக்கொலை குறித்த தகவல் போலீசாருக்குக் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மூதாட்டியின் உடலை மீட்டனர்.
இக்கொலை தொடர்பாக 52 வயதுடைய அண்டை வீட்டுக்காரர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் அரிவாள் ஒன்றும் சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் மனநலப் பாதிப்பு உடையவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் கடந்த பிப்ரவரி மாதம் உலு கிந்தா மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து மேல் விவரங்கள் தெரிந்த பொதுமக்கள், ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




















