ரோம் –
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் ஈரானில் அதிக பாதிப்பையும் உயிர்ப் பலியையும் ஏற்படுத்தி வருகிறது.
இத்தாலியின் வடக்கு பிராந்தியத்தில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரோம், மிலன், வெணிஸ் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் கொரோனா வைரசுக்கு தினமும் உயிர் பலி அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவி வருவதால் மக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மருந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வரும்படியும் வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.