சம்பளம் இல்லாமல் விடுமுறை

தொழிலாளர்களுக்கு மாதம் வெ.600 உதவித் தொகை

புத்ராஜெயா –

தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் மறு ஆய்வு செய்யப்பட்ட பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் கோவிட் – 19 வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசாங்கம் கூடுதல் சலுகைகள் வழங்கும்.

சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது என நேற்று நடைபெற்ற பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மாதம் 600 வெள்ளி நிதி உதவி வழங்கப்படும் எனவும் அதிகபட்சமாக ஆறு மாதத்திற்கு இந்த நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மார்ச் முதல் தேதி தொடங்கி சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த நிதி உதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கான ஒதுக்கீடு 120 மில்லியன் வெள்ளியாகும். சுமார் 33 ஆயிரம் தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.

மாதம் 4 ஆயிரம் வெள்ளிக்கும் கீழ் சம்பளம் பெறக்கூடிய பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தில் இருந்து ஒரு தொகையை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, மே மாதம் வழங்கப்படவிருந்த வாழ்க்கைச் செலவு உதவித் தொகையான 200 வெள்ளி மார்ச் 16ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

இதற்கான ஒதுக்கீடு 760 மில்லியன் வெள்ளியாகும். 38 லட்சம் பேர் இந்த உதவித் தொகையைப் பெறுவார்கள். இவர்களுக்கு மே மாதம் வாக்கில் கூடுதலாக 100 வெள்ளி வழங்கப்படும். இதற்கான ஒதுக்கூடு 500 மில்லியன் வெள்ளி எனவும் 50 லட்சம் பேர் இந்தத் தொகையைப் பெறுவார்கள் எனவும் அவர் சொன்னார்.

இதற்கிடையே வர்த்தகம், தொழில்துறை, விவசாயத் துறைகளில் அனைத்துப் பயனீட்டாளர்களுக்கும் இரண்டு விழுக்காடு மின்சாரக் கட்டணக் கழிவு வழங்கப்படும் எனவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் முதல் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆறுமாத காலத்திற்கு இந்த இரண்டு விழுக்காடு கழிவு வழங்கப்படும். இதற்கான ஒதுக்கீடு 500 மில்லியன் வெள்ளி. சுமார் 10 மில்லியன் பயனீட்டாளர்கள் இதனால் பயனடைவார்கள்.
இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here