புதுடில்லி மார்ச் 20-
மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே வருகிற 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு கடைபிடிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம். அன்று மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்று வீட்டுக்குள் இருந்தபடியோ அல்லது பால்கனியில் நின்றபடியோ கைகளை தட்டியோ, மணி அடித்தோ கொரோனாவை ஒழிக்க பாடுபடும் ஊழியர்களுக்கு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும். உள்ளூர் நிர்வாகம் அன்று மாலை 5 மணிக்கு ‘சைரன்’ ஒலி எழுப்பி இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த ‘மக்கள் ஊரடங்கு’ நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள முடியும். இதுபற்றி அடுத்து 2 நாட்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் வேலைக்கு வராவிட்டாலும் அவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்குமாறு அவர்களுடைய முதலாளிகளை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட உறுதி ஏற்போம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.