கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 103 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. 31-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சென்னை,மார்ச் 21-
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் கோவில்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 103 கோவில்கள் மூடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கூறியதாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், சுசீந்திரம் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட 103 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. நேற்று காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 31-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.