புத்ராஜெயா –
பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவின் இரண்டாம் கட்டம் நாளை ஏப்ரல் முதல் தேதி அமலுக்கு வருகின்ற நிலையில் நாடு முழுமையும் உள்ள உணவகங்கள், பேரங்காடிகள், எண்ணெய் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இது ஏப்ரல் முதல் தேதியில் இருந்து காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.
சில பேரங்காடிகள் தற்போது இரவு 10.00 மணி வரை செயல்படுகின்றன. மேலும் சில பேரங்காடிகள் நள்ளிரவு 12.00 மணிவரைகூட செயல்படுவதை நாங்கள் அறிவோம்.
ஆகவே, இனி பேரங்காடிகளும் உணவகங்களும் எண்ணெய் நிலையங்களும் காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிப்பது என அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்தத் தடை உத்தரவின் இரண்டாம் கட்டம் நாளை அமலுக்கு வரத் தொடங்கியதும் கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேலும் அதிகரிக்கும். உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளைப் பொட்டலமாகக் கட்டிக் கொடுக்கும் சேவையைத் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இதற்கிடையே, வீடுகளுக்கு நேரடியாக உணவுகளை விநியோகம் செய்வோர் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு வெளியே உணவுகளை வைத்து விட்டு வர வேண்டும் என்று ஆலோசனை கூறப்படுவதாகவும் அவர் சொன்னார்.
அவர்களை வாடிக்கையாளர்கள் சந்திப்பதைத் தவிர்ப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒருவர் மற்றவரைத் தொடுதலைத் தவிர்ப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கின்றோம். இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க முடியும் என்றார் அவர்.
பொதுப் போக்குவரத்து சேவை காலை 6.00 மணியில் இருந்து காலை 10.00 மணி வரையிலும் பின்னர் மாலை 5.00 மணியில் இருந்து இரவு 10.00 மணி வரையிலும் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் சொன்னார்.
டாக்சிகளும் மின் தொடர்பு வாடகைக்கார் சேவைகளும் காலை 6.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை நிற்காமல் தொடர அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.