கொரோனா சொல்லும் பாடம்

இந்த பூமி அழகானது; இதில் உள்ள காடுகள், மலைகள் அழகானவை; தொய்வில்லாமல் ஒடும் நதிகளும், அவை சேரும் சமுத்திரங்களும் அழகானவை; நீர், நிலங்களில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்கள் அழகானவை; ஆம், ஒட்டுமொத்த இயற்கையும் அழகானது; இவற்றை ஒட்டி வாழும் மனித குலத்தின் வாழ்க்கை அழகானது; இந்த இனிய வாழ்க்கை சூழலுக்கு கலக்கம் தர வந்ததோ இந்த கொரோனா தொற்று?

நான் ஒரு ஆத்திகன், இந்து மதத்தில் அதி தீவிர நம்பிக்கை கொண்டவன். ஆனாலும் ஒரு நிமிடம் இங்கே சிந்திப்போம்.
இன்று கொரோனா போடும் ஆட்டத்திற்கு எந்த ஒரு மனிதனும் உறுதியாக நம்புவான் – அல்லாவோ, ஏசு கிறிஸ்துவோ, புத்தரோ, மஹாவீரோ, ஏன் அந்த மகாதேவன் சிவபெருமானோ ஒன்றும் செய்யவில்லை என்று, ஏன்?

இந்த அகண்ட உலகத்தில் மனிதனின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஏராளம், ஏராளம். சாதாரண சக்கரத்தில் ஆரம்பித்து இருந்து விண்வெளியில் பறக்கும் விண்கலம் வரை அவன் கண்டுபிடிப்புகள் பற்ப்பல. ஆனாலும் நீங்கள் அனைவரும் அறிந்தது போல் அத்துனை கண்டுபிடிப்புகளும் இறைவனின் காரியதரிசியான / முகமாக விளங்கும் இயற்கையை அடிப்படையாக கொண்டே இருக்கின்றன. ஆம், மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் இயற்கையின் ஏதாவது ஒரு அம்சத்தை சார்ந்தே இருக்கின்றன. இப்போது மனிதன் பெரும்பாலான கண்டுபிடிப்புகளை முடக்கி விட்டு, தானும் முடங்கி இருக்கிறான். ஒரு கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிக்காக…

ஒரு வகையில், இயற்கை தன்னை தானே சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ள இறைவன் செய்த திருவிளையாடல்தான் இந்த கொரோனா விளையாட்டு என எண்ணுகிறேன்.

சரி, கட்டுரையின் கருவிற்கு வருவோம்.

நீங்கள் அறிந்தது போல் நாம் அனைவரும் நம்மை தனிமைபடுத்திக் கொண்டு வீட்டில் இருக்கிறோம். நாம் மட்டுமா, சாதாரண மனிதன் முதற்கொண்டு பல அரசியல் / நாடுகளின் தலைவர்கள் உட்பட, எல்லோரும் தனிமைபடுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்போது நம்மிடம் மின்சாரம் சார்ந்த பொருட்கள், அலைபேசி, கணினி என எதுவுமே இல்லை என்று நினைத்து கொள்ளுங்கள். அந்த நிலையில் நாம் பல நூறு / ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம். அப்போது நமக்கான தேவை என்னவாக இருக்கும்? பண்டைய தமிழன் சொல்லி வைத்த, இன்றியமையாத மூன்று விஷயங்கள்..

1. (உ)ண்ண (உ)ணவு

2. (உ)டுக்க (உ)டை

3. (இ)ருக்க (இ)ருப்பிடம்

சரிதானே? சில பொழுதுபோக்கு அம்சங்கள் (தாயம் முதலியன) தவிர்த்து நம் இன்றைய வாழ்க்கை நான் மேலே சொன்ன மூன்று விஷயங்களை மட்டும் நம்பித்தானை நகர்கிறது. இவை இல்லை என்றால் நம்மால் வாழ்க்கை நடத்த இயலுமா?

இன்று மால்கள் (பொழுதுபோக்கு சார்ந்த வியாபார தளங்கள்) இல்லை; சொகுசு நட்சத்திர விடுதிகள் இல்லை; உயர்தர உணவு விடுதிகள் இல்லை; திரை அரங்குகள் இல்லை; சுற்றுலா இல்லை; ஜாலியான கார் பயணங்கள் இல்லை; பூங்கா, கடற்கரை ஆகியவையும் இல்லை. ஆனால் நாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். நிதர்சனம் என்னவென்றால், மேலே உள்ள வசதிகள் எதுவும் இல்லை என்றாலும் நாம் வாழ்கிறோம் என்பதுதான் (சற்று சிரமம் இருந்தாலும்😀)

இப்படியாக நாம் ஏற்படுத்திய நவீனங்கள் பல வகைகளிலும் இயற்கையை பாதிப்பதோடு, நம் உடல்நலத்தையும், சேமிப்பையும் பாதிக்கிறது. சரி, அப்படி என்றால் இந்த நவீனங்கள் அத்தனையும் தேவை இல்லையா என்று கேட்டால் அதற்கு தேவைதான் என்ற பதில் கிடைக்கும். ஏனெனில் நவீனங்கள் சார்ந்து, தனி நபர் வருமானம், நாட்டின் பொருளாதாரம் என பல விஷயங்கள் இருக்கின்றன; மேலும் இவை காலத்தின் கட்டாயமும் கூட. ஆனால் இவற்றின் பயன்பாடு அல்லது மனிதன் இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தேவைக்கு மிக அதிமாக இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

உதாரணத்திற்கு சில: வீட்டிற்கு ஒரு வாகனம் போதுமானது என்றாலும் பல வாகனங்களை வாங்கி ஒரே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக உபயோகப்படுத்துவது; ஒரு காலணி போதும் என்றாலும் பல நிறங்களில் காலணிகளை வைத்துக் கொள்வது; அதிகப்படியாக அலைபேசி உபயோகிப்பது; இயற்கைக்கு ஒவ்வாத உணவுகளை உண்பது; இவையெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையை பாதிக்கிறது என்பது உண்மை.

கொரோனா இன்று மனித சமூகம் முழுவதையும் வீட்டிற்குள் முடக்கி விட்டது. இதனால், மனிதன் தான் கண்டுபிடித்த பல விஷயங்களை இன்று பயன்படுத்த முடியாமல் அடங்கி இருக்கிறான். உண்மையில், விரும்பியோ, விரும்பாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ அவன் இயற்கைக்கு நன்மை செய்கிறான். ஆம், கொரோனா எனும் நோய் மனிதனை கொல்ல வரவில்லை. மாறாக மனிதனுக்கு பாடம் சொல்வே வந்தது.

கொரோனா நமக்கு சொல்லும் பாடங்கள் மூன்று:

1. வாழ்க்கை என்பது அத்தியாவசிய விஷயங்களான உணவு, உடை, இருப்பிடம் என்பதை சார்ந்து மட்டுமே இருக்கிறது என்பதையும், ஏனைய விஷயங்கள் அவ்வளவு அவசியம் இல்லை என்பதையும், தேவைக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

2. இயற்க்கைக்கு மாறாக மனிதன் எதை செய்தாலும் அது அவனுக்கு தீமையே விளைவிக்கும் என்பதை காட்டுகிறது

3. எல்லாமும் எல்லோருக்கும் சமம் என்பதையும், இங்கு ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், பதவியில் இருப்பவன், சாதாரண மனிதன் என பாகுபாடுகள் இல்லை என்பதை காட்டுகிறது

ஆம், மீண்டும் சொல்கிறேன், இந்த பூமி அழகானது; இதில் உள்ள காடுகள், மலைகள் அழகானவை; தொய்வில்லாமல் ஒடும் நதிகளும், அவை சேரும் சமுத்திரங்களும் அழகானவை; நீர், நிலங்களில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்கள் அழகானவை; ஆம், ஒட்டுமொத்த இயற்கையும் அழகானது; இவற்றை ஒட்டி வாழும் மனித குலத்தின் வாழ்க்கை அழகானது; இந்த இனிய வாழ்க்கைக்கு கலக்கம் தர வரவில்லை இந்த கொரோனா; மாறாக நமக்கு பாடம் கற்றுத்தரவே வந்தது. வாழ்க்கை பாடம்; இயற்கை பாடம்; உண்மை பாடம்.

நன்றி

இரமேஷ் சூரியபிரகாசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here