“சமத்துவம் என்பது பிறப்புரிமை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் அடிப்படை”- உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் வெற்றிமாறன், பா.இரஞ்சித் ஆதரவு

சென்னை:

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

“சமத்துவம் என்பது பிறப்புரிமை. அதில் எந்த கேள்வியும் இல்லை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் அடிப்படை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும் அதை வீழ்த்த வேண்டியது நமது கடமை.

இந்த உணர்வு உள்ள அனைவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நிற்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் பேசியதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்றார் அவர்.

இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சனாதான ஒழிப்பு மாநாடு சனாதான கொள்கையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை வரவேற்கின்றோம்! காலங்காலமாக இச்சமூகத்தில் சனாதான கொள்கையான சாதிய படிநிலை ஒடுக்கமுறையை ஒழித்து சமூக சமத்துவத்தை நிலைநிறுத்த போராடியவர்களின் வரலாறு உள்ளது.

புத்தர், பண்டிதர் அயோத்தி தாசர், பாபாசாகேப் அம்பேத்கர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் சாட்சியமாக உள்ளார்கள். இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி, சமத்துவ சமதர்ம ஆட்சிமுறை அமைய, பகுத்தறிவு மலர, உண்மை மதச்சார்பின்மை ஓங்க பாபாசாகேப் அம்பேத்கரின் பெளத்தம் தத்துவம் உள்ளது. பெளத்தமே சனாதானத்தை ஒழிக்கும். சனாதான கொள்கையை ஒழித்து சமூக ஜனநாயகத்தை உருவாக்குவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here