அந்நியத் தொழிலாளர்களைத் தொடரும் துயரம்

கோலாலம்பூர் –

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா சிலாங்கூர் மேன்சனிலும் மலாயன் மேன்சனிலும் குடியிருக்கும் மக்கள் தங்களுக்கு உணவுகள் வழங்கப்படுவதற்காக நன்றி கூறியிருக்கின்றனர்.

அங்கு குடியிருப்போர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த இரண்டு குடியிருப்புகளிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அங்கிருந்து யாரும் வெளியே வரவும் யாரும் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு குடியிருப்புகளிலும் சுமார் 6,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் குறைந்த வருமானம் பெறக் கூடிய அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.

இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்காளதேசம் போன்ற நாடு களில் இருந்து பிழைப்புத் தேடி மலேசியா வந்தவர்கள் இவர்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மலேசியர்களும் அந்தக் குடியிருப்பில் வசிக்கின்றனர்.

அங்கு குடியிருக்கும் அந்நியத் தொழிலாளர்களில் பலரின் குடும்பங்கள் அவரவர் சொந்த நாடுகளில் உள்ளன. இவர்கள் மிக நெரிசலான இடங்களில் குடியிருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். சில வீடுகளில் 30 பேர் வரை குடியிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த அந்நியப் பிரஜைகளின் நலன்களைப் பாதுகாப்பது அந்தந்த தூதரகங்களின் கடமை யாகும் என்று தற்காப்புத்துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கின்றார்.

மலாயன் மேன்சனிலும் சிலாங்கூர் மேன்சனிலும் குடியிருப்போரில் கிட்டத்தட்ட 97 விழுக்காட்டினர் அந்நியப் பிரஜைகள். ஆகவே இவர்களின் நலன்களைக் காப்பதில் இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்காளதேசம் ஆகிய தூதரகங்கள் முனைப்புக் காட்ட வேண்டும் என்பது அமைச்சரின் வேண்டுகோள்.

இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் பணி களில் தூதரகங்கள் அவசியம் ஈடுபட வேண்டும் என்றார் அவர். இந்த விவகாரத்தில் மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றக் கூடிய சிறப்பு அதிகாரிகள் தற்போது உரிய பணியில் ஈடுபட்டிருப்பதாக இந்தியத் தூதரகமும் பாகிஸ்தான் தூதரகமும் அறிவித்திருக்கின்றன.

ஆனால் வியாழக்கிழமை வரை மலேசிய அதிகாரிகளிடம் இருந்துதான் நாங்கள் உணவு களையும் இதர பொருட்களையும் பெற்று வருகிறோம் என்று அங்கு குடியிருப்போர் தெரிவித்துள்ளனர்.

தூதரக அதிகாரிகள் தங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர்கள் கூறினர். மலேசிய முதன்மைப் பணியாளர்கள் வழங்கும் உணவுகளையே நானும் என்னோடு தங்கியிருக்கும் மேலும் நால்வரும் சார்ந்திருக்கின்றோம் என்று இந்தியப் பிரஜையான ஹலிம் அப்துல் ஹமிட் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் மலாயன் மேன்சனில் குடியிருக்கின்றார்.

சமையல் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. சமையல் பொருட்கள் வாங்க என்னால் வீட்டை விட்டும் வெளியே செல்ல முடியாது. ஆனால் நல்ல வேளையாக நேற்று முன்தினம் போலீஸ் அதிகாரிகள் வந்து சிற்றுண்டி உணவை வழங்கிச் சென்றனர் என்றார் அவர்.

அருகில் குடியிருக்கும் என் நண்பரிடம் இருந்து உணவு பெற்றுக் கொண்டேன் என இன்னொரு பிரஜையான மலாயன் மேன்சன்வாசி அலாடின் முகமட் அலி கூறினார்.
கட்டட நுழைவாயிலில் உள்ள ஓர் இடத்தில் அவர் உணவுப் பொட்டலங்களை வைத்து விட்டுச் சென்றார். அதனை எடுத்துச் செல்லும்படி போலீசார் என்னிடம் தெரிவித்தனர். சில சமயம் உணவுப் பொட்டலங்கள் தாமதமாகவே கிடைக்கின்றன எனவும் அவர் கூறினார்.

இந்தக் கட்டடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவி விடாமல் இருக்க முழு மருத்துவக் கண்காணிப்பு அங்கு போடப்பட்டுள்ளது. முள்வேலிகள் அமைக்கப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

போலீசாரும் ராணுவத்தினரும் பொதுத் தற்காப்புப் படையினரும் ரேலா படையினரும் இங்கு முழு நேர காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 11.00 மணிக்குத்தான் எனக்கு சிற்றுண்டி உணவுப் பொட்டலம் கிடைத்தது என்று தாஜுடின் பாருக் என்பவர் கூறினார்.

எங்கள் சிரமம் உணர்ந்து உணவுப் பொட்டலங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக நேப் பாளப் பிரஜைகளான ருபேஷ் தாஸ், தீபேந்திரா பண்டாரி ஆகியோர் தெரிவித்தனர். இவர்கள் அருகிலுள்ள மைடின் பேரங்காடியில் வேலை செய்கின்றனர்.

உணவு கிடைத்ததற்காக நன்றி கூறுகின்றோம். நெருக்கடியான இடத்தில் சிக்கியிருப்பது வேதனையாக உள்ளது. விரைந்து இது முடிவுக்கு வர வேண்டும் என்று பிரார்த்திப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

அது மட்டுமன்றி இந்த இருப்பிடம் சுத்தமாகவும் இல்லை என்று ரூபேஷ் கூறினார். எங்கள் முதலாளி சமையல் பொருட்களை வழங்கி இருக்கிறார். சில நாட்களுக்கு அது தாக்குப்பிடிக்கும் எனவும் தீபேந்திரா சொன்னார்.

போலீசார் எங்கள் வீட்டு வாசல் கதவுவரை வந்து உணவுப் பொட்டலங்களை வைக்கின்றனர். இந்தக் குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகச்சிறியவை. 30 பேர் வரை அதில் வசிக்கின்றனர். வாடகையாக ஆளுக்கு 200 வெள்ளி செலுத்த வேண்டும் எனவும் தீபேந்திரா சொன்னார்.

ஆனால் மைடின் தங்கும்விடுதியில் நெருக்கடி இல்லை. ஒரு யூனிட்டில் சுமார் ஏழு பேர்தான் வசிக்கின்றனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here