அம்பாங்கானில் அரசியல் கட்சிக் கொடிகளைச் சேதப்படுத்திய 70 வயது முதியவர் கைது: ‘வீடியோ’ ஆதாரத்தால் சிக்கினார்!

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி ஒன்றின் கொடிகளை அகற்றிச் சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நெகிரி செம்பிலான், அம்பாங்கானில் உள்ள டுசுன் செத்தியா (Dusun Setia) பகுதியில் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை 2:54 மணியளவில், குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொடிகள் அறுத்தெறியப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டது குறித்துக் காவல் துறைக்கு அதிகாரப்பூர்வப் புகார் ஒன்று கிடைத்ததாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மட் தெரிவித்தார்.

அந்த முதியவர் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிகளை அவிழ்த்து அகற்றும் காட்சிகளை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்களது தொலைபேசியில் வீடியோ எடுத்துச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

வீடியோ ஆதாரங்கள் மற்றும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று இரவு 9:45 மணியளவில் சிரம்பானில் வைத்து 70 வயதுடைய அந்த முதியவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427 (பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல்)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தேவையில்லாத ஊகங்களில் ஈடுபடவோ, சரிபார்க்கப்படாத வதந்திகளைப் பரப்பவோ கூடாது என மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மத் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக அமைதியைக் கெடுக்கும் வகையிலோ அல்லது காவல் துறையின் விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ எந்தவொரு பதிவுகளையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here