நியூயார்க்:அமெரிக்காவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 18 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 830 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 109 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 687 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 33 ஆயிரத்து 483 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.