புத்ராஜெயா –
மலேசியாவில் 56 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கோவிட்- 19 புதிய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இத்தொற்றுநோய் தடுப்பு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பெரும் வெற்றியைத் தந்துள்ளன என்று சுகாதார அமைச்சு நேற்று இங்கு வெளியிட்ட புள்ளி விவரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் மிகக்குறைந்த கோவிட்- 19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கூடுதலாக 36 சம்பவங்கள் மட்டுமே இதுவரை பதிவாகி இருக்கின்றன. கோவிட்- 19 மரணச் சம்பவங்கள் ஏதும் நேற்று பதிவு செய்யப்படவில்லை.
கோவிட்- 19 புதிய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படாத பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்று முதல் 20 வரையிலான சம்பவங்களைக் கொண்டிருக்கும் பகுதிகள் மஞ்சள் மண்டலங்களாகவும் 21 முதல் 40 வரையிலான சம்பவங்களைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் 41 சம்பவங்களுக்கும் மேலான பகுதிகள் சிவப்பு மண்டலங்களாகவும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.