2 பெரிய சந்தைகள் மூடப்பட்டன

கோலாலம்பூர் –

செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை தூய்மைப் பணிகளுக்காக 4 தினங்களுக்கு மூடப்படுகிறது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.

அச்சந்தைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக இந்த இரண்டு பெரிய சந்தைகளும் தற்காலிகமாக மூடப்படுகின்றன. அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெரும்பாலானவாசிகள் இந்த மொத்த விற்பனை சந்தைகளில் பணிபுரிந்து வருவதால் இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

அச்சந்தையை 14 நாட்களுக்கு மூட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

வியாழக்கிழமை வரை அவ்விரண்டு சந்தைகளும் மூடப்பட்டு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு தூய்மைப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இவ்விரு சந்தைகளும் திரும்பத் திறக்கப்படும்போது சுகாதார ரீதியில் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் சொன்னார். இவ்விரு சந்தைகளும் வழக்கம்போல் செயல்படும் என்று அரசாங்கம் முன்னதாகக் கூறியிருந்தாலும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு மிக அருகில் அவை இருப்பதால் தற்போது தற்காலிகமாக மூடப்படுவதாக அமைச்சர் சொன்னார்.

நான்கு நாட்களுக்கு இரண்டு பெரிய சந்தைகளும் மூடப்படுவது குறித்து வணிகர்களுக்கும் அவர்களைப் பிரதிநிதிக்கும் சங்கத்திற்கும் நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறுகியகாலத் தகவல் என்பதால் விரைந்து தங்களின் விற்பனை இடங்களைக் காலிசெய்ய முடியவில்லை என்று வணிகர்கள் புகார் சொன்னாலும் பாதுகாப்பு முக்கியம் என்பதால் அதில் எவ்விதப் பேரமும் பேசப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

காலை 6.00 மணிக்கு செலாயாங் மொத்த விற்பனை சந்தைக்கு வந்த வியாபாரிகள் சந்தை திடீரென மூடப்பட்டதைக் கண்டு சற்றே அதிர்ச்சியுற்றனர். சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் செலாயாங் பெரிய சந்தை சுற்றுப் பகுதியில் ஊரடங்கு விதிப்பதறகு அரசாங்கம் முடிவு செய்தது. இந்த இரண்டு வார கால உத்தரவு மே 3ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

ஊரடங்கு விதிக்கப்பட்ட பகுதிகள் 8 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பார்சல் 1 (ஜாலான் 6/3ஏ, பூசாட் பண்டார் உத்தாரா), பார்சல் 2 (ஜாலான் 6/3ஏ, 9/3ஏ, பூசாட் பண்டார் உத்தாரா), பார்சல் 3 (ஜாலான் 2/3ஏ, பூசாட் பண்டார் உத்தாரா), பார்சல் 4 (ஜாலான் 2/3ஏ), பூசாட் பண்டார் உத்தாரா), பார்சல் 5, (தாமான் ஸ்ரீ முர்னி ஃபாசா 2, ஜாலான் 1/2டி), பார்சல் 6 (தாமான் ஸ்ரீ முர்னி ஃபாசா 1, ஜாலான் 1/2டி, பார்சல் 7 (தாமான் ஸ்ரீ முர்னி ஃபாசா 3, ஜாலான் 1/2பி), பார்சல் 8 (தாமான் பத்து வியூ, தாமான் பத்து ஹம்பார்.

இந்த இரண்டு சந்தைகளும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படும்போது அங்குள்ள வணிகர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்று கேட்டபோது, இதற்குரிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வழங்கும் என்று சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

வணிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் கோவிட்- 19 பாதிப்பில் இருந்து விடுபட்டிருக்கின்றனர் என்பதை உறுதி செய்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அரசாங்கம் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொள்ளும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here