இன்று அல்லது நாளை அறிவிப்பு
கோலாலம்பூர் –
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மார்ச் 18ஆம் தேதி விதிக்கப்பட்ட பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா, தளர்த்தப்படுமா அல்லது ஏப்ரல் 28ஆம் தேதிக்குப் பிறகு முடிவுக்குக் கொண்டு வரப்படுமா என்பது பற்றி பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று வியாழக்கிழமை அல்லது நாளை வெள்ளிக்கிழமை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவு 3ஆம் கட்டமாக அமலில் இருக்கின்ற நிலையில் புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
ஆகவே சில துறைகளுக்கான நிபந்தனைகளை அரசாங்கம் தளர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீட்சி பெறுவதற்கு வர்த்தக நடவடிக்கைகள், வேலை இடங்கள் போன்றவற்றில் சில நிபந்தனைகள் தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலை முற்றாகத் துடைத்தொழிக்கும் வரையில் மலேசியாவின் தற்போதைய பொதுமக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு நீடிக்க வேண்டும் எனவும் சில தரப்பினர் கருதுகின்றனர்.
இந்த உத்தரவை மேலும் நீட்டிக்கலாம். ஆனால் வர்த்தகப் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு சில தளர்வுகளை அரசு வழங்க வேண்டும் என்று புத்ரா வர்த்தக கல்விக்கூடத்தின் வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி இணைப் பேராசிரியர் டாக்டர் அகமட் ரஸ்மான் அப்துல் லத்திப் தெரிவித்தார்.
தளர்வு வழங்கப்பட்டால் மீண்டும் செயல்படும் தொழில்களின் நடத்துநர்கள் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள விதிமுறைகளைத் தாங்கள் கடைப்பிடிப்பதை நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள நிரந்தர நடவடிக்கை விதிமுறைகளுக்கேற்பவே வர்த்தகங்கள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர் டாக்டர் அய்மி ஸுல்ஹஸ்மி அப்துல் ரஷிட் கருத்துரைத்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு புதிய சூழ்நிலைக்கேற்ப உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.