தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்காதீர்

ஆட்குறைப்பு, சம்பளக்குறைப்பு வேண்டாம்

கோலாலம்பூர் –

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கம் பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை அமல்படுத்தியதில் இருந்து சாமானியத் தொழிலாளர்கள் முதல் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று எம்டியூசி எனப்படும் மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் ஜே. சாலமன் நேற்று மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதில் அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார்.

ஓராண்டு காலத்திற்கு தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படாமல் இருப்பதையும் ஆட்குறைப்புச் செய்யப்படாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
அதோடு தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்கக்கூடாது.

மேலும் சம்பளமில்லா விடுமுறையில் செல்லும்படி தொழிலாளர்களை முதலாளிகள் தரப்பு கட்டாயப்படுத்தக்கூடாது. தொழிலாளர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா நெருக்கடி தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டிருக்கிறது. மனத்தளவிலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வருமானம் இன்றியும் அவர்கள் தவிக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஆட்குறைப்பு, வேலை நீக்கம், சம்பளக் குறைப்பு, சம்பளமில்லா விடுமுறை போன்ற நடவடிக்கைகளை முதலாளிகள் தரப்பு மேற்கொள்ளாமல் மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளர்களை அணுக வேண்டும் எனவும் சாலமன் வலியுறுத்தினார்.

சோதனை மேல் சோதனை எனும் நிலையில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் நலன் எந்தச் சூழ்நிலையிலும் புறக்கணிக்கப்படக்கூடாது. அவர்களின் நலனை முழுமையாகப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார் அவர்.

இதனிடையே, அந்நியத் தொழிலாளர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

முதலாளிகள் சிலர் தங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை எனவும் வேலை வாய்ப்பு தரவில்லை எனவும் தங்களை ஒதுக்கி வைத்து விட்டதாகவும் 1,554 அந்நியத் தொழிலாளர்களிடம் இருந்து புகார்கள் கிடைத்திருக்கின்றன என்றார் அவர்.

கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி முதலாளிகள் அந்நியத் தொழிலாளர்களை அலட்சியம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் நடப்பு உத்தரவு முடிவுக்கு வந்த பிறகு அவர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் நிலையில் புதிய ஆள்பலத்திற்கு அவர்கள் எங்கே போவார்கள்?

ஆகவே அந்நியத் தொழிலாளர்களைப் புறக்கணிக்காமல் அவர்களின் நலனையும் முதலாளிகள் தரப்பு கவனிக்க வேண்டும். தங்களிடம் வேலை செய்த அந்நியத் தொழிலாளர்களை தற்போதைய நெருக்கடியைக் காரணம் காட்டி அவர்களை அலட்சியம் செய்தால் அதனால் நாட்டின் நற்பெயருக்குத்தான் களங்கம் ஏற்படும்.

அதோடு கைவிடப்படும் அந்நியத் தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலையும் என்ன ஆகும் என்பதை முதலாளிகள் தரப்பு சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சாலமன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here