தேர்வுகளை மட்டுமே சார்ந்து மாணவர்களை மதிப்பிடாமல் எல்லா திறன்களையும் மதிப்பிட வேண்டும்

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூன்றாம் கட்டமாகச் செயலாக்கம் கண்டுள்ள நிலையில், அதன் பாதிப்பு பொருளாதாரத் துறைகளை மட்டும் உட்படுத்தி இருக்கவில்லை.

அஃது மாணவர்களின் கல்வி கற்கும் நிலையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதன் காரணமாக யூ.பி.எஸ்.ஆர்.  மற்றும் பிடி3 தேர்வுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் அடைவு நிலையை மதிப்பிட பல்வேறு வழிகள் இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, செயல்வழி கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தொடக்கக் கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தகுதி நிலையை நிர்ணயிக்காமல் கற்றல் மதிப்பீடு மேற்கொள்ள ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வியில் தேர்வுகளை மட்டுமே சார்ந்து மாணவர்களை மதிப்பிடாமல், எல்லா திறன்களையும் நன்கு ஆராய்ந்து, மாணவர்களின் தகுதி நிலையை எதில் ஆர்வம் உள்ளதோ, அதை மேம்படுத்த வேண்டும் எனக் கூறுகிறார்.  தேசிய வகை ஜெண்டரட்டா தோட்ட அல்பா பெர்னம் பிரிவுத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தி சுப்ரமணியம்.

பாடங்களைத் தவிர்த்து, புதிதாக கலைக்கல்வி அறிமுகமாகி உள்ளது.

கலைக்கல்வியில் பாட்டு, இசை, ஓவியம், நடனம், விளையாட்டு என மாணவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்.

அதனை அடிப்படையாகக் கொண்டு தமது பள்ளியில்  மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணரவே கலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் இரு பக்க மூளையும் செயல்பட வேண்டும் என்றார் அவர். மேலும் மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலைநுட்பத் திறமையுடன் கூடியப் பொருட்கள் நிகழ்வுகளைப் புனைந்து காட்சிப்படுத்தல், அரங்கேற்றல், கைவினை கலைநயம் படைத்தல் போன்றத் திறமைகளையும் தட்டி எழுப்ப வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இக்காலகட்டத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே புலனங்கள், இணையம், கூகுள், மின்னியல் ஊடகங்கள் வழி கற்றலை மட்டும் பயிலாமல் கலைக்கல்வியையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

ஆகையால் இதன்வழி என் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கியுள்ளோம்.

பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளுடன் நல்லுறவு கொள்ளவும் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக கூறுகிறார் தலைமையாசிரியர் சாந்தி.

  • டில்லிராணி முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here