100 குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர்கள்: பிரபாகரன் வழங்கினார்

1,000 குடும்பங்களுக்கு சமையல் பொருட்கள்

கோலாலம்பூர் –

ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் செலாயாங் பாசார் போரோங் தாமான் ஸ்ரீமுர்னியைச் சேர்ந்த 1,000 பேருக்கு நேற்று உணவு வழங்கப்பட்ட வேளையில் 200 குடும்பங்களுக்கு நேரடியாக சமையலுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் தெரிவித்தார்.

பத்து தொகுதி மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் 50 குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீமுர்னி வளாகம் முள்வேலிக் கம்பியால் மூடப்பட்டிருப்பதால் அங்கு யாரும் செல்ல முடியவில்லை. வீட்டில் கேஸ் முடிந்து விட்டதால் சமைக்கக்கூட முடியவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் முறையிட்டனர்.

உடனடியாக 2 லோரிகளில் கேஸ் சிலிண்டர்கள் அனுப்பப்பட்டது. எனது சேவை மையத்தைச் சேர்ந்த எட்டு பணியாளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களிடம் கேஸ் சிலிண்டர்களை ஒப்படைத்தனர். அதன் பின்னர் அவர்கள் வீட்டிற்குத் தேவையான உணவை சமைத்ததாகக் குறிப்பிட்ட பிரபாகரன் இன்று மேலும் 50 குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இதனிடையே, நேற்று 200 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மீகூன், மேகிமீ, எண்ணெய், கோதுமை மாவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் 1,000 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் அனுப்பி வைக்கப்பட்ட வேளையில் இன்னும் 800 பேருக்கு படிப்படியாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

பத்து தொகுதி மக்கள் சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தாமான் ஸ்ரீமுர்னியில் உள்ள தேசிய சமூகநல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேர்ந்தது என்றார் அவர்.

செலாயாங் பாசார் போரோங் உட்பட ஸ்ரீமுர்னியைச் சேர்ந்த 8 குடியிருப்புப் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்களிடம் தொற்றுக்கிருமி தொடர்பில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இங்குள்ள மக்கள் வெளியே செல்ல முடியாதபடி முள்வேலிக் கம்பிகள் அமைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக நோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்துகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் உணவு இல்லாமல் பரிதவிக்கின்றனர்.
இங்கு செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் பத்து நாடாளுமன்றத் தொகுதி மக்கள் சேவை மையத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களும் சமையல் பொருட்களும் வந்த வண்ணம் இருப்பதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here