எங்கள் ரேபிட் டெஸ்ட் கருவிகளை தரமற்றது என்று முத்திரை குத்துவது நியாயமல்ல – சீனா

புதுடெல்லி, ஏப்ரல் 29-
கொரோனா பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட்‘ கருவிகளை 2 சீன நிறுவனங்களிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்தது.
ஆனால், அந்த கருவிகள் தவறான முடிவுகளை காட்டியதால், அவற்றை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புமாறு மாநில அரசுகளிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கூறியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து டெல்லியில் உள்ள சீன தூதரகம் பதில் அளித்துள்ளது. அந்த தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வைரஸ் என்பது மனித குலத்தின் பொது எதிரி. கூட்டாக செயல்படுவதன் மூலம்தான் அதை முறியடிக்க முடியும். கொரோனா வைரஸ் தோன்றியதில் இருந்து இந்தியா-சீனா இடையே நல்ல தகவல் தொடர்பும், ஒத்துழைப்பும் நிலவி வருகிறது.
இந்தியாவின் நிலையை அறிந்து, நோய் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அனுபவங்களை இந்தியாவிடம் சீனா பகிர்ந்து கொண்டது. மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களின் தரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, சில தனிநபர்கள், சீன பொருட்கள் தரமற்றவை என்று முத்திரை குத்துவது நியாயமல்ல, பொறுப்பற்றது. முன்கூட்டியே தவறான எண்ணத்தை உருவாக்கிக்கொண்டு சொல்கிறார்கள்.
இந்த கருவிகள் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அந்த நாடுகள் எல்லாம் இக்கருவிகளை அங்கீகரித்துள்ளன.
அப்படி இருக்கையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய மதிப்பீடும், அதன் அடிப்படையில் எடுத்த முடிவும் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
சீனாவின் நல்லெண்ணத்தையும், உண்மைத்தன்மையையும் இந்திய தரப்பு மதித்து நடக்கும் என்று நம்புகிறோம். சீன நிறுவனங்களுடன் தகவல் தொடர்பை வலுப்படுத்தி, பிரச்சினைக்கு நியாயமாகவும், உரிய முறையிலும் தீர்வு காணும் என்று நம்புகிறோம். இவ்வாறு சீன தூதரகம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here