ஸ்ரீலங்காவின் களுத்துறையிலுள்ள சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த ஃபைடே மாஸ்டர் நிரிஷ் குமார் சிவாகுமார் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று நாட்டிற்குப் பெருமைசேர்த்துள்ளார்.9 சுற்றுகள் கொண்ட சுவிஸ் முறையில் நடைபெற்ற இந்த மிகக் கடுமையான தொடரில், தனது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய நிரிஷ் குமார் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
கிராண்ட் மாஸ்டரையே திணறடித்த அதிரடி ஆட்டம்!
இந்தத் தொடரின் ஒரு முக்கிய சுற்றில், தன்னைவிட மிக அதிக ரேட்டிங் கொண்ட கிராண்ட் மாஸ்டரான ஸ்ரீஹரி எல்.ஆர்.-ஐ எதிர்கொண்ட நிரிஷ் குமார், ஆட்டத்தின் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மிக நேர்த்தியான மற்றும் அதிரடியான உத்திகளைக் கையாண்டு அவரை வீழ்த்தி சர்வதேச சதுரங்க அரங்கையே வியப்பில் ஆழ்த்தினார். மலேசியாவின் முன்னாள் கடற்படை கப்பல் தளபதியான சிவாகுமாரின் மகனான நிரிஷ் குமார், தனது தந்தையின் வழிகாட்டுதலோடு சதுரங்க விளையாட்டில் தொடர் சாதனைகளை படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அக்ரம்ஸ்யா மு அம்மர் உபாய்தா சனுசி, இத்தொடரில் நேரில் கலந்துகொண்டு மலேசிய வீரர்களுக்குத் தனது முழு ஆதரவையும் பாராட்டுகளையும் வழங்கினார். நிரிஷ் குமாரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, மலேசிய சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இவரைப் போன்ற இளம் வீரர்களின் எழுச்சி, சர்வதேச அரங்கில் மலேசிய சதுரங்க விளையாட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்கிறது. பி. ராமமூர்த்தி.








