‘கிம் உயிருடன் இருக்கிறார்’ நிற்கவோ, நடக்கவோ முடியாது – வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி பேட்டி

கிம் உயிருடன் இருப்பதாகவும் அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது

சியோல்,ஏப்ரல் 30-

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் தேதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த செய்திகளை மறுப்பதோடு, கிம் நலமாக இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், கிம் நலமுடன் இருக்கிறார் என்று, தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிம் ஜாங் அன் உயிருடன் இருக்கிறார் என்றும், ஆனால் அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் வட கொரிய தூதரக பணியிலிருந்தும், அந்த நாட்டை விட்டும் வெளியேறிய தே யோங் ஹோ தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறியதாவது:-

கடந்த 15-ந் தேதி நடைபெற்ற வடகொரிய நிறுவனரும் கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சுங் பிறந்த நாள் விழாவில் பங்கேற்காததில் இருந்து கிம்மிற்கு உடல் நலமில்லை அல்லது காயப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

அவருக்கு உண்மையிலேயே ஏதாவது அறுவை சிகிச்சையோ வேறு ஏதேனும் நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் தெளிவு, அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

வடகொரியாவில் இருந்து வெளியேறி, தென்கொரியாவில் வாழ்ந்து வரும் தே யோங் ஹோ அண்மையில் நடைபெற்ற தென்கொரிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here