மலாக்கா –
உலகையே உலுக்கி உள்ள கோவிட் – 19 தொற்றுநோய்த் தாக்கத்திலிருந்து மலாக்கா சுற்றுலாத் துறை மீண்டு வர குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று மலாக்கா சுற்றுலா, பாரம்பரிய கலாச்சாரப் பிரிவின் ஆட்சிக் குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜெய்லானி காமிஸ் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முழுமையாக அமலில் இருக்கும் வரையில் தங்கும் விடுதிகள் உட்பட பல சுற்றுலா வசதிகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளன. தங்கும் விடுதிகளை இந்த இக்கட்டான சூழ்நிலையில் தக்கவைத்துக் கொள்வதற்கும் பொருளாதார அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை நாம் கவனிக்க வேண்டி உள்ளது என்றார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலமான சுற்றுலாத் தலமாகத் திகழும் வரலாற்று மாநகரமான மலாக்காவின் பெருமையை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிக்கு பல்வேறு சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த தொழில்துறை நிறுவனங்களிலிருந்து நெருக்கமான ஒத்துழைப்பு தேவை என்றார்.
2018இல் 20,000க்கும் குறைவான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு மலாக்கா விமான நிலையத்தைப் பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000 ஆக அதிகரித்துள்ளது என்று முகமட் ஜெய்லானி கூறினார்.