செலாயாங் பாசார் போரோங்கில் மீண்டும் அதிரடி

கோலாலம்பூர் –

பாசார் போரோங் செலாயாங் பகுதியில் நேற்று குடிநுழைவு இலாகாவினர் மீண்டும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட அந்நியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

அந்தப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை அது நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தத் திடீர் அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி சோதனை நேற்று அதிகாலை தொடங்கி மேற்கொள்ளப்பட்டது. குடிநுழைவு இலாகாவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் போலீஸ் மற்றும் இதர அமலாக்க அதிகாரிகள் பாதுகாப்பு ரீதியில் ஆதரவு வழங்கினர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாஸிம் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம், சுகாதார இலாகா உட்பட பல அமைப்பினர் இந்த அதிரடி சோதனையில் பங்கேற்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்தும் இந்த அதிரடி சோதனை கண்காணிக்கப்பட்டது. இதில் சட்டவிரோதமாக ஆவணங்கள் ஏதுமின்றி தங்கியிருக்கும் அந்நியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டு குடிநுழைவு இலாகாவின் தடுப்புக் காவல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதற்கு முன்னதாக அவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களுள் ஐநா அகதி அட்டை வைத்திருப்பவர்களின் அகதி அந்தஸ்து குறித்தும் ஆய்வுமேற்கொள்ளப்பட உள்ளது.

சட்டவிரோத அந்நியப் பிரஜைகளினால் ஏற்படும் பிரச்சினைகளினால் மக்களுக்கு பெரும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து அரசாங்கம் இந்த அதிரடி சோதனைகளை மேற்கொள்கிறது எனக் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா தெரிவித்தார்.

இதனிடையே, இந்தச் சோதனை நேரத்தில் பணியிலிருந்த செய்தியாளர்கள் சிலரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் என்று கூறப்பட்டது. குறிப்பாக மக்கள் ஓசை நிருபர் எல்.கே. ராஜ், ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலைப் பதிவைச் செய்துகொண்டிருந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி தனது கைத்தொலைபேசியையும் மோட்டார் சைக்கிள் சாவியையும் எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார்.

நான் ஊடகச் செய்தியாளர். விதிமுறைகள் எதனையும் நான் மீறவில்லை எனக் கூறியபோதிலும் அவர்கள் இது மேலிட உத்தரவு என்று என்னிடம் தெரிவித்தனர். மேலும் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காகக் கைதுசெய்யப்படலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டதாக ராஜ் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை மலேசியா கினி ஊடகம் தமது செய்தியில் சுட்டிக்காட்டியது. இந்நிலையில் அபாயகரமான பகுதி என்பதால் ஊடகவியலாளர்களை அந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இடங்களில் அனுமதிப்பதில்லை. இந்த விவரத்தை அனைத்து செய்தியாளர்களும் புரிந்துகொண்டனர் என்று டத்தோஸ்ரீ மஸ்லான் தெரிவித்ததாகவும் அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here