குழந்தைகளுக்கு (எம்ஐஎஸ்-சி) நோய்: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: பிள்ளைகளிடையே பரவக்கூடிய நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் நோய் குறித்து அமெரிக்க சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நோய்க்கு பலஅமைப்பு வீக்கம் நோய் (எம்ஐஎஸ்-சி) என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பெயரிட்டுள்ளது.

இந்நோய் முதன்முதலாக பிரிட்டனில் கடந்த ஏப்ரல் மாத பிற்பகுதியில் பதிவானது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து முதல் 16 வயதுடைய பிள்ளைகளுக்கு சுவாச நோய் போன்று கடுமையான காய்ச்சலுடன் தோலில் சிவப்பு தடிப்புகள், சிவந்த கண்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நோயாளிகளிடம் காணப்படும் அறிகுறிகள் சில சமயங்களில் கவாசாகி நோய் எனப்படும் அரிய நோய்க்கான அறிகுறிகளோடு ஒத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கவாசாகி நோய் உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களை வீங்கச் செய்து கடுமையான வலியை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்து நிபுணர்கள்.

எம்ஐஎஸ்-சி நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளிடையே நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் வெளியே தெரியத் தொடங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, பிரிட்டனில் சுமார் 100 பிள்ளைகள் கவாசாகி போன்ற இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு 14 வயது சிறுவன் ஒருவன் இந்நோயால் மாண்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

பிரிட்டன், அமெரிக்கா மட்டுமல்லாது பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் கொரோனாவுக்கும் இந்நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here