மலாக்கா, மே16-
பத்துபிரண்டாம் ஹங் துவா ஜெயா நகராண்மைக் கழகத்தின் கீழ் இயங்கும் பாசார் போரோங்கில் வேலைச் செய்து வரும் ஊழியர் ஒருவருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரம் , போதைப் பொருள் தடுப்பு பிரிவின் ஆட்சிக் குழு தலைவர் ரஹமாட் மாரிமான் நேற்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அத்தகவலை வெளியிட்டார்.
கடந்த மே 11ஆம் திகதி மாநில சுகாதார இலாக்கா அங்குப் பணி புரியும் 326 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கோவிட் 19 பரிசோதனையில் அந்த நோய் தொற்று கண்ட 30 வயதுடைய நபர் அடையாளம் காணப்பட்டதாக கூறினார்.
அங்குள்ள கோழி விற்பனை செய்யும் கடையில் உதவியாளராக வேலைச் செய்த வந்த நபருக்கு நோய் தொற்று எவ்வாறு பரவியது என்பது ஆய்வு செய்வதாகவும் கூறினார். அந்த நபர் பணிப் புரிந்து வந்த கோழி விற்பனை கடை உடனடியாக மூடுவதற்கு சுகாதார அமைச்சு கட்டளையிட்டுள்ளது. இதர கடைகள் வழக்கம் போலவே வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று சம்பவத்தை தொடர்ந்து அங்கு வணிகம் செய்யும் வியாபாரி ,ஊழியர்கள் என 1000 பேர் நேற்று பிற்பகல் 3.00 முதல் இரவு 10.00 வரை பத்து பிரண்டாமில் உள்ள கிளினிக் கெசியாத்தானில் கோவிட் 19 – பரிசோதனைச் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் தொற்றுனால் பொது மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என பொய் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.