சென்னை 28 படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றிகண்ட நிலையில், அதன் மூன்றாம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
வெற்றி பெறும் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன. அதேபோல் லாரன்ஸின் காஞ்சனா படமும் 3 பாகங்களாக வந்து வெற்றி கண்டது. தற்போது சுந்தர் சி-யின் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் 2016ஆம் ஆண்டு வெளியாகியது. இப்படமும் நல்ல வசூல் பார்த்தது. தற்போது சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க வெங்கட்பிரபு ஆலோசித்து வருகிறார். சூழ்நிலை சரியாக அமைந்தால் சென்னை 28 மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.