ஒரு பக்கம் கொரோனா; மறுபக்கம் டிங்கி!

சிரம்பான் –

ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் டிங்கி கொசுவால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாவிற்கு அரசாங்கம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறதோ அதேபோல் டிங்கிக் கொசு ஒழிப்பிற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

சிரம்பான் ஜெயா பாசா 10இல் அமைந்துள்ள ரூமா மூராவில் 9 பேருக்கு டிங்கி காய்ச்சல் கண்டுள்ளது. இந்தப் பகுதியில் அதிகமானவர்களுக்கு டிங்கி காய்ச்சல் கண்டுள்ளதால் மாநில சுகாதார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி அதற்கு தீர்வு காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் காலையில் சட்டமன்ற உறுப்பினர் குணா, சிரம்பான் சுகாதார அமலாகப் பிரிவின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் ரெம்பாவ்
சிரம்பான் நகராண்மைக்கழக உறுப்பினர் புவான் ஜமிலா ஆகியோர் இந்த வீடமைப்பு பகுதிக்கு வருகைபுரிந்து பார்வையிட்டனர். இந்த வீடமைப்பு பகுதியில் அமைந்துள்ள காலி வீட்டின் மேல் தளத்தில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் நீர் பயன்படுத்தப்படாததால் டிங்கி கொசுக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வீடு காலி வீடாக உள்ளதால் நீதிமன்றம் அனுமதி இல்லாமல் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு நீர் தொட்டி வீட்டின் கூரைப் பகுதியில் அமைந்துள்ளதால் வீட்டை உடைக்காமல் மேல் ஏறி அந்த நீர் தொட்டியில் மருந்து தெளிக்கலாம் என்று குணா தெரிவித்தார்.

இந்தக் குடியிருப்பு பகுதியில் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கிய நிலையில் இருப்பதனாலும் டிங்கி கொசுக்கள் உருவாகலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 45 அடி தொலைவில் தோட்டங்கள் அமைந்துள்ளன. அந்தத் தோட்டங்களிலிருந்தும் டிங்கி
கொசுக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here