ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ்

ரோட்டில் ஆதரவற்ற நிலையில் இருந்த தனலெட்சுமி என்ற பாட்டியை தனது வீட்டில் வைத்து பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ்.

ரோட்டில் ஆதரவற்ற நிலையில் அலைபவர்கள் பலரை பார்ப்போம். மனதில் கொஞ்சம் ஈரம் இருந்தால் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு நகர்ந்து விடுவோம். சராசரி மனிதனின் மனிதாபிமானம் அவ்வளவுதான்.

இதுவே ஒரு போலீஸ்காரராக இருந்தால்.. யார்? என்ன என்று விசாரிப்பார்கள். பின்னர் அங்கிருந்து கிளம்பும்படி கூறி செல்வார்கள்.

ஆனால் சென்னை அடையாறு பஸ் டெப்போ அருகில் தனியாக இருந்த ஒரு பாட்டியை பார்த்ததும் பெண் போலீஸ் மரியம் புஷ்பமேரிக்கு அவரை அங்கேயே விட்டு செல்ல மனம் வரவில்லை. அருகில் சென்று விசாரித்து இருக்கிறார். அப்போது அவர் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய சோக சுமைகளை அந்த பெண் சுமந்து கொண்டிருப்பது தெரியவந்தது.

அந்த பாட்டியின் பெயர் தனலெட்சுமி (65). கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவரது மகனும், மருமகளும் மஞ்சள் காமாலை வியாதியால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்கள்.

அதனால் பேரக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனலெட்சுமியின் தோளில் விழுந்தது. வயதான காலத்திலும் தனது குலவாரிசை எப்படியாவது வளர்க்க வேண்டுமே என்று தவித்தார்.

அதைத் தொடர்ந்து வேலை தேடி சென்னை வந்தார். பூந்தமல்லியில் உள்ள ஒரு ஆண்கள் ஹாஸ்டலில் சமையல் வேலையில் சேர்ந்தார். மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம்.

பேரக்குழந்தையை ஊரில் தனலெட்சுமியின் கணவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா தனலெட்சுமியின் வாழ்க்கையிலும் விளையாடியது.

ஹாஸ்டலை மூடி விட்டதால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த தனலெட்சுமி ஊருக்காவது சென்று விடலாம் என்று கோயம்பேடு பஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் நிலையத்தில் தவித்து இருந்தார். அங்கு இருக்கக் கூடாது என்று போலீசார் விரட்டி இருக்கிறார்கள்.

எங்கு செல்வது என்று தெரியாமல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கேயே 4 நாட்கள் தங்கி இருக்கிறார். தன்னார்வலர்கள் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு அங்கேயே தூங்கி இருக்கிறார்.

தனது நிலையை கும்பகோணத்தில் இருக்கும் கணவருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார். அவராலும் எந்த உதவியும் செய்ய முடியாமல் அடையாறில் இருக்கும் ஒரு உறவினர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

கோயம்பேட்டில் இருந்து அடையாறுக்கு நடந்தே சென்ற தனலெட்சுமி அந்த உறவினர் வீட்டில் 15 நாட்கள் தங்கி இருந்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்ததால் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறும்படி உறவினர்கள் கூறி விட்டனர்.

அங்கிருந்து வெளியேறிய தனலெட்சுமி எங்கே செல்வது என்று தெரியாமல் அடையாறு பஸ் டெப்போவில் தங்கி இருந்த போதுதான் பெண் போலீசின் கண்களில் சிக்கி இருக்கிறார்.

அவரது சோக கதையை கேட்ட மேரியால் அவரை விட்டு செல்ல மனம் வரவில்லை. உடனே கணவருக்கு போன் செய்து நிலைமையை சொல்லி வீட்டிற்கு அழைத்து வர அனுமதி கேட்டு இருக்கிறார். மனைவியின் இரக்க குணத்துக்கு அவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து தனலெட்சுமியை தனது இல்லத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இப்போது தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வோடு தனலெட்சுமியும் உற்சாகமாக இருக்கிறார் என்பது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here