பட்டர்வொர்த்:
தேசிய பத்திரிகையாளர் தினம் (Hawana 2026) நெருங்கி வரும் வேளையில், நாட்டின் மிகப்பெரிய ஊடகவியலாளர்களின் சங்கமத்தை மிகச் சிறப்பாக நடத்துவதற்கான இறுதிவட்ட ஏற்பாடுகள் பினாங்கில் உள்ள ‘பிக்கா’ (PICCA Convention Centre @ Arena Butterworth) மாநாட்டு மையத்தில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வருகிற ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விழாவின் முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் உள்நாட்டு மற்றும் ஆசியான் (ASEAN) நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 1,200 சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காகத் தளவாடங்கள், தொழில்நுட்பப் பணிகள், பாதுகாப்பு, உணவு உபசரிப்பு என ஒவ்வொரு துறையிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிக்கா (PICCA) மாநாட்டு மையத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஜேம்ஸ் சாங் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில்:
“ஹவானா செயலகத்துடன் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாகவே நாங்கள் இதற்கான திட்டமிடல்களைத் தொடங்கிவிட்டோம். தற்போது 75 விழுக்காட்டுப் பணிகள் முழுமையடைந்துள்ளன. எஞ்சிய இறுதிக்கட்ட வடிவமைப்புப் பணிகளும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கப் போலீஸார் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.”
மேலும் ஜூன் 19 முதல் 21 வரை நடைபெறவுள்ள ‘ரிவ் பி ஹவானா’ (RIUH Pi Hawana Carnival) பொதுமக்களை ஈர்க்கும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட கண்காட்சிச் சாவடிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்மாண்ட இசைக்கச்சேரிகள் இடம் பெறவுள்ளன.
இதற்காக மாநாட்டு மையத்தைச் சுற்றிலும் சுமார் 3,000 வாகனங்கள் நிறுத்துவதற்கான (Parking) வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
“ஊடக நேர்மை நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்” (Media Integrity Strengthens Credibility) என்ற உன்னதக் கருப்பொருளைக் கொண்டுள்ள இந்த ‘ஹவானா 2026’ மாநாட்டை, ஜூன் 20 அன்று மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.
கோவிட்-19 பொதுமுடக்கக் காலத் தாமதத்திற்குப் பிறகு, கடந்த 2022-இல் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட ‘பிக்கா’ (PICCA) மாநாட்டு மையம், ஏற்கனவே 2023-இல் தேசிய அளவிலான திருக்குர்ஆன் ஓதுதல் போட்டி மற்றும் 2025-இல் மலேசிய தினக் கொண்டாட்டம்
போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெரிய நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹவானா 2026 மாநாடும் இங்கு நடப்பதால், பட்டர்வொர்த் நகரம் வணிகச் சுற்றுலாத் தளமாக சர்வதேச அளவில் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















